தேர்தல் நடத்தை விதிகள் மீறியது தொடர்பான புகாரின் பேரில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியுள்ளார்.

கடந்த 7ஆம் தேதி பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மாயாவதி, “முஸ்லீம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பிற கட்சிகளுக்குச் செலுத்தாமல், சிதற விடாமல் மெகா கூட்டணியான எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9ஆம் தேதி யோகி ஆதித்யநாத் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, “காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் எங்களுக்குப் பஜ்ரங்பலி மீது நம்பிக்கை இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

சாதி மதம் சார்ந்த பேச்சுகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்த நிலையில், இரு கட்சி தலைவர்களின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரிடமும் விளக்கம் கேட்டுத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான பொதுநல வழக்கொன்றில் யோகி ஆதித்யாநாத், மாயவதி இருவர் மீதும் தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையென இன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், சாதி, மதத்தைக் கொண்டு தேர்தல் ஆதாயம் காணும் வேட்பாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள உத்தரவில், நாளைக் காலை 6 மணி முதல் 72 மணி நேரத்திற்கு உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல், நாளைக் காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நேரத்தில் அவர்கள் நேரடியாகவோ தொலைக்காட்சியிலோ பேட்டி அளிப்பது, வேறு ஏதாவது முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுவரை எச்சரிக்கை மட்டுமே விடுத்துவந்த நிலையில், தற்போது இரண்டு பேருக்குத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.