ரஃபேல் ஊழல் பற்றி எஸ்.விஜயன் எழுதிய “நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்” என்ற புத்தகத்தை வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. 2019 மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜக ஆட்சிக்கு எதிராக, ரஃபேல் பேர ஊழலை எதிர்க்கட்சிகள் ஆயுதமாக்கி இருக்கின்றன. இந்த ஊழல் தொடர்பாக, ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் எஸ்.விஜயன்.

சென்னைத் தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயம் சார்பில், எஸ்.விஜயன் எழுதிய இந்நூல் இன்று (ஏப்ரல் 2) மாலை 5 மணிக்கு புரசைவாக்கத்தில் வெளியிடப்பட இருந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசனும், இந்து குழும தலைவர் என்.ராமும் இந்நூலை வெளியிட்டு பேச இருந்தனர். அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தை பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோர் பேச இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்துள்ளார். மீறி இந்த புத்தகத்தை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயம் கடையிலிருந்த சுமார் 150 புத்தகங்களை கைப்பற்றிச் சென்றிருக்கின்றனர் தேர்தல் பறக்கும் படையினர். ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகங்களை பறிமுதல் செய்தது ஜனநாயக விரோத, சட்டவிரோத நடவடிக்கை என்றும், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும் என்.ராம் தெரிவித்துள்ளார்.