மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக பீகார் காவல்துறைத் தெரிவித்துள்ளது.

பசுப் பாதுகாப்பு மற்றும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தியும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படும் கும்பல் வன்முறைகளைத் தடுக்க கோரி நாட்டின் பிரதமர் மோடி அவர்களுக்கு இந்தியாவின் பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகள் கடிதம் அனுப்பி இருந்தனர். இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக சுதிர்குமார் ஓஜா என்ற பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடுத்தார். அதில் இந்தக் கடிதம் நாட்டின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிறது. இவர்கள் அனைவரின் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்குப் பதிவு செய்ய பீகார் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த செய்தி காட்டுத்தீபோல நாடு முழுவதும் பரவியது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இது இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால் எனவும் சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் போக்கு என தங்களது கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

இந்தநிலையில் புதன்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சின்ஹா, நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தொடரப்பட்ட இந்த தேசத்துரோக வழக்கில், மனுதாரரான சுதிர்குமார் ஓஜா போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறினார். மேலும் அவரின் புகார் ஆதாரமற்றதாகவும், முழுக்க முழுக்க சமூக அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.

இந்த சுதிர்குமார் ஓஜா பல பொதுநல வழக்குகளைத் தனது சுய விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவர் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுவும் இப்படியான ஒரு வழக்காகத்தான் இருக்கும் எனவும் சொல்கின்றனர். அந்த வழக்கறிஞர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்துள்ளனர்.