க்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளை வீடியோ பதிவுசெய்யவேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

2019 மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், வரும் 19ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, 26ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவடைந்தநிலையில், நேற்று (மார்ச் 15) தொகுதி பட்டியலை வெளியிட்டது திமுக. தற்போது தமிழகத்தில் எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி நெருங்கும் வேளையில், வேட்புமனு தாக்கலின்போது, பின்பற்றிய விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும்  கடிதம் அனுப்பியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

அதில், வேட்புமனு தாக்கல் செய்யவரும் வேட்பாளர்கள் 3 வாகனங்களில் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களும் தேர்தல் அதிகாரியின் அறையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வருவோருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.  வேட்பு மனு தாக்கலை வீடியோ பதிவுசெய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யவரும் வேட்பாளர்களின் வாகனங்களையும் வீடியோ பதிவுசெய்ய வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல் விதிமுறை மீறல் நடைபெற்றால், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்யும் போது, பத்திரிக்கையாளரை உள்ளே அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் வீடியோ பதிவு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.