தமிழக காவல்துறையில் பணியாற்றும் 2 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கமும், 21 அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான போலீஸ் பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட 16 அதிகாரிகளுக்குத் தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காவல் துறையில் மெச்சத்தக்க சேவை மற்றும் வீர தீரச் செயல்கள் புரிந்த அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில காவல்துறை, துணை ராணுவப்படை, விசாரணை அமைப்புகள், புலனாய்வு முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நாடு முழுவதும் சிறப்பாகப் பணிபுரிந்த காவல் துறை அதிகாரிகள் 677 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சிவகங்கை எஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன், சென்னை கியூ பிரிவு டிஎஸ்பி யாக்கூப், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால், கிருஷ்ணகிரி ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி லவாகுமார், உதகை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி சிறப்பு போலீஸ் உதவி படைத் தலைவர் கோவிந்தராஜூ, உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களுக்கு 16 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, காவல் நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி கந்தசுவாமி, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட 6 பேருக்கு தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி. வனிதா, சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் புருஷோத்தமன், சேலம் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஆகிய 10 பேருக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள் என அறிவித்துள்ளது தமிழக அரசு.