உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் மூன்று தரப்பினரும் நிலத்தை சமமாக பங்கிட்டுகொள்ள, கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 வழக்குகள் தொடரப்பட்டன. இதற்குத் தீர்வுகாணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதிலும் தீர்வு காணப்படாததால், நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் அக்டோபர் 16ஆம் தேதியுடன் (நேற்று) முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிக்கப்பட்டன. இதையடுத்து, தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெற உள்ளதால் அதற்கு முன்பே தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரனையின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விசாரணையை நடத்த போதுமான கால அவகாசம் வேண்டும் என கூறினர். ஆனால், அவர்களின் கோரிக்கையை அரசியல் சாசன அமர்வு நிராகரித்தது.

தொடர்ந்து, இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரி கிஷோர் குனால் எழுதிய புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தைக் காட்டும் வரைபடத்தை சாட்சியாக சமர்ப்பித்தார். இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், இதுபோன்ற புத்தகங்களை சாட்சியாக சமர்ப்பிக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் அவர் சாட்சியாக சமர்ப்பித்த வரைபடத்தை வாங்கி பார்த்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் அதனை கிழித்து போட்டார்.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் நீதிபதிகள் எழுந்து சென்று விடுவோம் என தலைமை நீதிபதி கடிந்து கொண்டுள்ளார். பின்னர், ராஜீவ் தவானின் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டதாக தெரிவித்த நீதிபதிகள், விகாஸ் சிங்கை தொடர்ந்து வாதங்களை முன் வைக்குமாறு கூறினர்.