நேற்றிலிருந்து பலருக்கு இதயமே நின்றிருக்கும். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நேற்று மாலை நான்கு மணியிலிருந்து படிப்படியாக உலகின் பல பாகங்களில் செயலிழந்தது. இதற்கு முன்னும் இப்படி நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இதுதான் பேஸ்புக் வரலாற்றில் மிக நீண்டதாகும்.

ஃபேஸ்புக்கின் பல சேவைகள் இப்போதும்கூட முழுமையாகச் செயல்படவில்லை. முதலில் ஃபேஸ்புக்கும் பிறகு இன்ஸ்டாகிராம் வாட்ஸ்ஆப்பும் செயலிழந்தன. இதை அந்நிறுவனங்கள் அதிகாரப் பூர்வமாகவே அறிவித்தன.


2008-இல் இதற்குமுன் நடந்தது. ஆனால் அப்போது ஃபேஸ்புக் உபயோகிப்பவர்கள் 1.5 கோடி மக்கள்தான் ஆனால் இன்று 230 கோடி மக்கள். ஃபேஸ்புக், பல சமூக மாற்றங்கள், தினசரி செய்திகள், எண்ணிலடங்கா படைப்புகள், உலகின் மிக முக்கிய தகவல் பரிமாற்றம் நடைபெறும் இடமாகவும் நமது வாழ்வில் மிக முக்கிய தொடர்பு களமாக இருக்கும் இந்த நிலையில் ஃபேஸ்புக்கின் இந்தச் செயலிழப்பு பலரைப் பதட்டப்பட வைத்துள்ளது.

இதற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது DDoS எனும் சைபர் தாக்குதலா என்ற செய்தியை அந்நிறுவன தொழில்நுட்ப அதிகாரிகள் மறுத்துள்ளனர். நாங்கள் இதை மிக விரைவாகச் சரி செய்யும் பணியில் இருக்கிறோம் பதட்டப்பட வேண்டாம் என்று மட்டுமே அறிவித்துள்ளன.

தனிப்பட்ட ஃபேஸ்புக் பயன்பாட்டைத் தாண்டி பல நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை தங்கள் முழுநேர வேலைசெய்யும் தளமாகப் பயன்படுத்துகின்றன. இதனால் அவர்களின் வணிக சேவையும் சேர்த்தே முடக்கப்பட்டன. இதைப்பற்றி பலர் கூறும்போது இப்படி ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு நாம் அடிமையாக இருப்பதின் விளைவுகளே இது என்றனர்.

 

இதற்குள் இதைப்பற்றி, உலகமே மீண்டும் கற்காலத்திற்குச் சென்றுவிட்டது, பொருளாதாரம் அடியோடு அழிந்தது, மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள், இனி என் ஃபோட்டோகளுக்கு யார் லைக் போடுவார்கள். தினமும் இனி யார் என் வாழ்வைப் பரிசோதிப்பார்கள் எனப் பல வேடிக்கையான மீம்ஸ்கள், #FacebookDown மற்றும் #InstagramDown போன்ற ஹாஸ்டாக்குகள் விரைவாகப் பரவ ஆரம்பித்துள்ளன. சிலர் இனி நாம் டிவிட்டருக்கு சென்றுவிடுவோம் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தற்போது மீண்டும் உலகின் சில பகுதிகளில் வேலை செய்தாலும் இன்னும் முழுமையாகப் பல சேவைகள் சரிசெய்யப்படவில்லை.


இன்று எப்படியும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் வாட்ஸ்ஆப்பும் சரி செய்யப்பட்டுவிடும் அது பெரிதல்ல ஆனால் ஒரு விஷயம் நம்மை யோசிக்கவைக்கிறது. நாம் இன்று தொடர்புகொள்ளுவதற்குப் பயன்படுத்தும் உலகின் 3 முக்கியமான சேவைகளை ஒரே நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. இப்படி உலகம் முழுவதும் ஒரே நிறுவனத்தை அனைத்து சமூக நிகழ்வுகளுக்கும் நம்பியிருப்பது ஒரு பெரும் ஆபத்து.