புகை நமக்கு பகை என்று சொல்வார்கள், அது எந்த புகையாக இருந்தாலும் பகையில் தான் முடியும் என்று சொல்கிறது சீனா ஆய்வறிக்கை.

புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு, புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லும் அதே வேளையில் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் அகர்பத்திகள் கூட புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக கடவுள் தொழுகையில் பயன்படுத்தப்படும் அகர்பத்திகள் ஆன்மிகரீதியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் அகர்பத்திகளிலிருந்து எழக்கூடிய வாசனை மனதில் அமைதியையும் நல்ல சிந்தனையும் தூண்டக்கூடியது என்று சொல்கிறார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு சீனா சுற்றுச்சூழல் வேதியியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் சிகரெட் புகையைவிட அகர்பத்தியின் புகைகள் கடுமையான பாதிப்புகள ஏற்படுத்தக்கூடியவை என்றும் அகர்பத்திகளில் உள்ள ரசாயனங்கள் மற்றும் வேதியியல் பொருட்கள் மனிதனின் உள்ளுறுப்புகளை விரைவில் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் புற்று நோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களுக்கு இட்டுச்செல்லக்கூடிய மரபணு மற்றும் சைட்டோடாக்ஸிக் போன்ற பல்வேறு வகையான நச்சுத்தன்மைகள் அகர்பத்திகளில் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.

இதனால் ஆராய்ச்சியாளர்கள், மிகக்குறைந்த அளவில் வீடுகளில் அகர்பத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்.