அத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு, 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 1ஆம் தேதி குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48ஆவது நாளான ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

அனந்தசரஸ் குளத்தில் குப்பை கூளங்கள் இருப்பதாகவும் அதனை சுத்தப்படுத்தாமல் குளத்தில் அத்திவரதரை வைத்துவிட்டால் மீண்டும் 40 ஆண்டுகளுக்குக் குளத்தைச் சுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு ஏற்கனவே தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்திற்காக மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் பரிசீலித்து வருவதாக மனுதாரர் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, “தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என முதல்வர் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுத்து இருப்பதாக அமைச்சரே அறிவித்துள்ளார். எனவே 48 நாட்களுக்கு மேல் தரிசனத்தை நீட்டிக்க முடியாது” என அரசு தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்கக் கோரும் வழக்கை இணைக்க முடியாது எனக் கூறினார். இதைதொடர்ந்து, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்த நீதிபதி, கோயில் விவகாரம் தொடர்பாக அரசும், அறநிலையத் துறையும்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறினார்.

மேலும் பக்தர்களின் நலனுக்காக வழக்கு தொடர்வதாக இருந்தால் பொது நல வழக்காகத் தொடர அறிவுறுத்திய நீதிபதி, அத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.