90.581 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற டி-சீரீஸ் (T-Series), உலகின் நம்பர் 1 யூடியுப் சேனல் என்று  அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட இணையதளமான யூடியூப்-ஐ அக்டோபர் 2006-ல் கூகுள் வாங்கியதையடுத்து, தற்போது உலகின் முன்னணி வீடியோ தளமாக இருந்து வருகிறது. இதில் உலகிலேயே அதிக சந்தாதாரர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் சேனல்கள் அவ்வப்போது சேனலின் பிரபலத்தை வைத்து அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

மார்ச்13,2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி-சீரிஸ், தற்போது உலகிலேயே அதிக சந்தாதாரர்களை கொண்ட யூடியுப் சேனலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த  PewDiePie என்ற சேனல்தான் யூடியூபில் 90.454 மில்லியன் சந்தாதாரர்கள் பெற்று முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது அதைப் பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் டி-சீரிஸ் சேனல் 6,500 சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கை வெளியாகும்போது டி சீரிஸ் யூடியூப் சேனலுக்கு 90.539 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர். தற்போது 90.581 மில்லியன் சந்தாதாரர்களாக அதிகரித்துள்ளது.

இந்தச் சேனல் முதல் இடத்தைப் பிடிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே, பலமுறை முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் சிறு சிறு சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் வந்துள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள் வித்தியாசத்தில் டி-சீரிஸ் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. இந்த T-Series நிறுவனம், 29 துணை சேனல்களையும்  நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.