தர்க்கரீதியாக எந்தவொரு காரணமுமின்றி சகமனிதன் மீதி இனம், மதம் மற்றும் மொழி சார்ந்து வெறுப்பை உமிழ்வது பாசிசத்தின் அடிப்படை அலகு. பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது சூரியனுக்குக்கீழ் தாங்கள்தான் ஆகச்சிறந்தவர்கள் என்ற கற்பிதத்தை சாசனப்படுத்தி அதன்வழியே அனுமதிக்கப்பட்ட மற்றும் நன்கு ஒருங்கிணையப்பட்ட அத்துமீறுதல்களின் வழியே மற்றவர்களின் செல்வத்தை அபகரிப்பதில் ஆரம்பித்து அவர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, மொழி, இலக்கியம்,

ஒரு மனிதன் அவன் ஆன்மாவை நிலைத்திருக்கச்செய்யத் தேவைப் படக்கூடிய சகலத்தையும் அழித்து, இறுதியில் அவனை யும் அழித்தொழிக்கும். இதற்கு ஆகச்சிறந்த சான்று அயோக்கியன் ஹிட்லர் தலைமையிலான நாசிக்களின் ஜெர்மனியை  சொல்லலாம்.

இரண்டாம் உலகப்போரில் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த நாசிகளின் அட்டூழியங்கள், யூதர்களின் இன அழிப்பிற்காக அவர்கள் ஏற்படுத்திய வதை முகாம்கள், ஐரோப்பாவின் மற்ற தேசங்களை கைப்பற்றிய போது கொள்ளையடித்து அறிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், நேச நாடுகளின் பொருளாதாரத்தைச் சீரழிக்கக் கள்ள நோட்டுகளை உருவாக்கிது,

 போரின் முடிவுக்குப் பின்பு “ ஹோலோகாஸ்ட்” என்றழைக்கப்பெற்ற வதைமுகாம்கள் அங்கு நடை பெற்ற இனப்படுகொலைகளும் யூதர்கள் பரப்பிவிட்ட புரளி என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது, தங்களுடைய அடையாளங்களை மாற்றிக்கொண்டு

போருக்கு பிறகான ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் குடியேறியது, நியுரம்பெர்க்ஹ் விசாரணை என கோமாளிகளின்

பெருங்கூட்டம் என்று குறைத்து மதிப்பிடப்பெற்ற நாசிக்களின் போர்க்குற்றங்கள் சார்ந்து அநேக நூல்கள், திரைப்படங்கள்  மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் உருவாகின, உருவாகிக்கொண்டிருக்கின்றன மேலும் உருவாக்கம் பெறும் ஏனென்றால்  படைப்புகளின் வழியாகவே நாம் வரலாற்றை கற்கிறோம். அந்த வரிசையில் சமீபத்திய வரவு மார் டர்ஹறோனாவின்             “The Photographer of Mauthausen“(எஸ்பான்யோவில் El fotógrafo de Mauthausen).

ப்ரான்ஸிஸ்க்கோ ப்பாய்க்ஸ்ஆக மரியோ கஸாஸ் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். The Boy Missing, The Body போன்ற மிகச்சிறந்த மர்மப்படங்களை இயக்கிய மார் டர்ஹறோனாவின் வழக்கமான பாணியிருந்து முற்றிலும்  மாறுபட்ட இப்படைப்பு ஸ்பெயினிலிருந்து அஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படலாம்.

ஆஸ்திரியாவிலிருந்த மாவுத்தவுஸன் வதை முகாம் நாசிக்களின் தொடக்கக்கால வதைமுகாம்கள் என்தோடில்லாமல்  நேசநாடுகளால் இறுதியாக விடுவிக்கப்பெற்ற முகாமும் கூட. ஜெர்மனி ப்ரான்ஸை கைப்பற்றியபோது ஸ்பெயினிலிருந்து  நாடுகடத்தப்பட்ட 7000 பொதுவுடமைவாதிகள் மாவுத்தவுஸன் வதை முகாமிற்கு அனுப்பப்பட்டனர் அவர்களில்  ப்ரான்ஸிஸ்க்கோ ப்பாய்க்ஸ்ம் ஒருவர்.  ப்பாய்க்ஸ் ஒரு புகைப்பட கலைஞரும் ஆவார்.

மாவுத்தவுஸன் வதை முகாமில் ப்பாய்க்ஸின் உயிர்பிழைத்தலுக்கு அவரின் புகைப்படகலையும் ஒருவிதத்தில் உதவியது. முகாமிற்குக் கொணரப்படும் போர்க்கைதிகளை குழுக்களாகவும் பிறகு தனித்தனியாகவும் புகைப்படமெடுத்தல் அவற்றை  ஆவணப்படுத்துதல், வதைமுகாமில் கைதிகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டனர் என்ற பொய்ப்பரப்புரைக்காக அரங்கேற்றப் பெற்ற புகைப்படங்களை எடுப்பதில் துணைபுரிதல், படுகொலை செய்யப்பெற்ற சிறைக்கைதிகள் மின்சார வேலியைத் தாண்டும்போது இறந்துபோனார்கள் என்பதற்குத் தேவையான புகைப்படங்களை உருவாக்குதல் என ஆவணப்படுத்தப்பட்ட சகல அயோக்கியத்தனங்களுக்குமான அடிப்படையாக அவர்கள் எடுத்து புகைப்படங்களே இருந்தன அவைசார்ந்த பணிகளின் தேவைக்காக ப்பாய்க்ஸ் நாசிக்களுக்கு தேவைப்பட்டார்.

நாசி அயோக்கியர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை நியுரம்பெர்க்ஹ்ல் நடைபெற்றபோது, ப்பாய்க்ஸ் நேரில் சாட்சியமளித்ததோடில்லாமல் அவரின் மாவுத்தவுஸன் வதை முகாம் புகைப்படங்கள் நாசிகளுக்கெதிரான மிகமுக்கியமான ஆவணாமாகவுமிருந்தது. ஒரு புகைப்படம் என்பது உறைந்துபோன காலவெளியின் ஒரு சிறுபுள்ளி மட்டுமே ஆனால் அத்தருணத்தில் அதுகாட்சி படுத்தும் ஒளிப்புள்ளிகளின் பெருந்தொகுதி அதை வரலாற்றின் மிகமுக்கியமான ஆவணமாக மாற்றிவிடுகிறது. இது  ஏறக்குறைய எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும் அதனால்தான் பாசிசவாதிகள் ஆயுதங்களைவிட நூல்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் போன்ற ஆக்கங்களைக் கண்டு பெரும்பீதியுற்றனர் /  வருகின்றனர்.

வரலாற்றின் எந்த பக்கத்தில் நாமிருக்கிறோம் என்பது அதுநிகழும் காலத்தில் நமது நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் அந்த வகையில் ப்ரான்ஸிஸ்க்கோ ப்பாய்க்ஸ்ம் அவருடன் இருந்த  சகஸ்பானியர்களும் புகைப்படசுருள்களில் ஒழிந்துகொண்டிருந்த  மானுட பேரவலங்களையும், நாசிக்களின் அயோக்கியத்தனங்களையும் உலகம் அறிந்துகொள்ளும் பொருட்டு சிலர் தங்களின் உயிரையும்  பணயம்வைத்து அவ்வதைமுகாம்களிலிருந்த படச்சுருள்களைக்  கடத்திவந்தனர். அதில் ப்பாய்க்ஸின்பங்களிப்பு ஆகச்சிறந்தது.கிட்டத்தட்ட 20000 படச்சுருள்களிலிருந்து சுமாராக வெறும் 1000 படச்சுருளை  மட்டுமே அவரால்வெளிக்கொணர முடிந்தது ஆனால் அவற்றில் எண்ணிலடங்கா வதைகளின் பெருவலி உறைந்துபோயிருந்தது.

 

 

காண்க

ப்ரான்ஸிஸ்க்கோ ப்பாய்க்ஸ்ன்  மாவுத்தவுஸன் வதை முகாம் புகைப்படங்கள்

https://elpais.com/elpais/2015/05/11/album/1431356745_951078.html#foto_gal_1

ப்ரான்ஸிஸ்க்கோ ப்பாய்க்ஸ்ன்  நியுரம்பெர்க்ஹ் வாக்குமூலம்

https://collections.ushmm.org/search/catalog/irn1001340