கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ4,432.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்ததன் காரணமாகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் மழை வெள்ளத்தால் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா, ஒடிஷா, இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ4,432.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு செய்யப்பட்டது.