பல கட்சி தலைவர்கள், பல சம்பவங்கள் என்று பல்வேறு வகையான தலையங்க கேலிச் சித்திரங்களை நாம் பார்த்திருப்போம். சரியான கட்டுரைக்கு சரியான வரைபடம் வரையப்பட்டுள்ளது என்று புகழ்ந்திருப்போம். தலையங்க கேலிச்சித்திரங்களுக்காகவே பல பத்திரிகைகள் இன்றும் வாசகர்களால் வாங்கப்பட்டு வருகின்றன. அரசியல் கேலிச்சித்திரங்களை பார்த்து அரசாங்கமே பயந்து நடுங்கி உடனடி நடவடிக்கைகள் எடுத்த சம்பவங்களும் இங்கு உண்டு.

காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறைகளிலும் சில மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் கேலிச்சித்திரங்களை தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் அதிக கவனிக்கப்படும் மீம்ஸ் என்று சொல்லக்கூடிய புகைப்படங்கள் ஓரங்கட்டிவிடுமோ என்று பத்திரிகை நிறுவனங்கள் அச்சத்தில் உள்ளன.

அரசியல் கேலிச்சித்திரங்களுக்கென்று தனி மரியாதை மற்றும் தனி கவனம் இருந்ததென்றும் தலையங்க பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு கொடுக்கப்படும் அதேபொறுப்பும் மதிப்பும் கேலிச்சித்திரங்கள் வரையும் ஓவியருக்கும் இருந்தது என்றும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்று சமூகவலைதளங்களில் எந்தவித பாரபட்சமின்றி அனைவருக்கும் நகைச்சுவை உணர்வு மேலோங்கி காணப்படுவதால் அனைத்தையும் எந்த வரையறையின்றி மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். அனைவரும் பத்திரிகையாளர்கள் ஆகிறார்கள். அனைவரும் தங்கள் சமூக பொறுப்பை பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் என வெளிப்படுத்தி வருகிறார்கள்

அடுத்தவர் மனதை புண்படுத்தாது சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சம்பந்தப்பட்ட நபர்களை சிந்திக்கக்கூடிய வகையில் கேலிச்சித்திரங்கள்  என்று சொல்லப்பட்ட கறுப்பு வெள்ளை வரைபடங்கள் அமைந்துள்ளன. ஆனால் மீம்ஸ் என்று சொல்லக்கூடிய புகைப்படங்களில் எல்லைமீறி தனிநபர் தாக்குதலாக அமைகிறது. அதுவே பொதுமக்களும் சமீப காலங்களில் ரசித்தும் வருகின்றார்கள்.

இப்படியே சென்றால் நாளடைவில் கேலிச்சித்திரங்கள் மறைந்து பத்திரிகை தலையங்கங்களில் மீம்ஸ்கள் இடம்பெறும் காலம் நெடுநாள்கள் இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது.