இந்தியன் 2 படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்போது கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிர் இழந்தனர். இதனை அறிந்த திரையுலக பிரபலங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, அறிக்கை ஒன்றை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக சுற்றிவந்துகொண்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் சிம்பு கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது சினிமா தொழிலாளர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றிவைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களின் நீர் முட்டிக்கொண்டு வருகிறது.

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈடு செய்யமுடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தரவேண்டிக் கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும்.

இனியொருபோதும் இப்படி ஒரு இழப்பு வேண்டாம் தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதி செய்யவேண்டும்.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடு செய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பின்போது நிகழும் இதுபோன்ற விபத்துக்களுக்கு பெப்சி அமைப்பும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆங்காங்கே கோரிக்கைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.