சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 70 ஆயிரம் பேர் பலியாயினர். அதேபோன்று இம்மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் நேற்று இரவு நிகழ்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

இதே பகுதியில் இன்று காலையும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர், 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் தங்குவதற்காக தற்காலிகமாக ஐந்தாயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.