டிவிட்டரில் எத்தனையோ ஹாஷ்டேகுகள் ட்ரெண்ட் செய்யபட்டு வருகின்ற நிலையில் தற்போது சுத்தத்திற்காக #ட்ராஷ்டேக்  சேலஞ்ச் இளைஞர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் விசித்திரமான சேலஞ்ச் ஒன்றை கண்டுப்பிடித்து அதற்கு ஹாஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதுகுறித்து வீடியோ வெளியிடுவது புழக்கத்தில் இருந்து வருகிறது. கிகி (#kiki) சேலஞ்ச், ப்ளூவேல்(#blueWhale), மோமோ(#MoMo), ஐஸ் பக்கெட்(#IceBucket), 10இயர் சேலஞ்ச்(#10yearchallenge) போன்ற சேலஞ்ச்சுகள் பிரபலமானது.

ப்ளூவேல் சேலஞ்ச் மற்றும் மோமோ சேலஞ்ச் போன்ற மிகவும் ஆபத்தான சேலஞ்ச்சுகள் இளைஞர்களிடையே பிரபலமானது. ஆனால், அதன் ஆபத்துக்களை பல உயிரிழப்புகளுக்கு அடுத்துதான் நம்மால் உணர முடிந்தது. அதனையடுத்து  அதுமாதிரியான சேலஞ்ச்சுகளின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. மேலும் அதிகளவில் ட்ரெண்டான ஒரு சேலஞ்ச் என்றால் ஓடும் காரிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடும் கிகி சேலஞ்ச்தான், இது இளைஞர்கள் மட்டுமல்லாமல் சினிமா நட்சத்திரங்களிடையேயும் பிரபலமானது.

இந்நிலையில் குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று அந்த இடத்தை சுத்தம் செய்வதற்குமுன், சுத்தம் செய்ததற்குப்பின் என இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து #Trashtag என்ற டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சேலஞ்ச் ஆரோக்கியமான விஷயத்துக்குப் பயன்படுவதாகவும் நாடும் சுத்தம் செய்யபடுவதாகவும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் துவங்கிய இச்சேலஞ்சானது, உலகில் பல பகுதிகளில் வைரலாகி தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் நேற்று(மார்ச்,14) முதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சேலஞ்ச் டேக் பல ஆண்டுகளாக இருந்தாலும் வைரலாகாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.