காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து, அதன் நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த அமைப்புக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால், மெகபூபாவும் அவரது கட்சி தொண்டர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீவிரவாத தாக்குதல்

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்மாவில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைதொடர்ந்து, இந்தியாவிலும், உலக நாடுகள் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்தன. இந்தியா-பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜமாத் இஸ்லாமி அமைப்புக்கு தடை

இந்நிலையில், காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடை 5 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து காஷ்மீரில் 155 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், 18 பிரிவினைவாத அமைப்பின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்து பாதுகாப்பு பிப்ரவரி 20ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

பின்னர் அவர்களை கைது செய்து, அவர்களின் வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை சேர்ந்த 12 நிர்வாகிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு நெருக்கமான அமைப்பு என்பதால், இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

அலுவலகங்களுக்கு சீல்

ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து கைதுசெய்வதற்கு காஷ்மீர் காவல் ஆய்வாளர்களுக்கும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் காஷ்மீர் அரசு நேற்று (மார்ச் 1) அதிகாரமளித்ததை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்ட்து. இதையடுத்து ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த 350க்கும் அதிகமான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் நிர்வாகிகளின் சொத்துகள் மற்றும் அமைப்புக்குச் சொந்தமான சொத்துகளை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் இயக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் பட்சத்தில் அங்கு பயிலும் மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்

இதற்கிடையே ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் முதல்வரும்  மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.  இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசை எதிர்த்து மெகபூபா முஃப்தியும், அவரது கட்சியினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு தொடர்பில் இருந்ததாக 1990களில் ஒருமுறை தடை செய்யப்பட்டது. அந்தத் தடை 1995ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.