தமிழ‌கத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு‌ பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாகத் தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2013 டிசம்பர் மாதம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகைச் செய்யப்பட்டது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்பான லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. லோக் ஆயுக்தா அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் 4 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். பலமுறை உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்தும் லோக் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தமிழக அரசு.

கடந்த பிப்ரவரி மாதம், நடைபெற்ற விசாரணையில், 16 வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்களை நியமித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதையடுத்து லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 13ஆம் தேதி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை முடித்தது.

தேர்தல் ந‌டத்தை விதிமுறை அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. தற்போது தேர்தல் ஆணையம், லோக் ஆயுக்தா அமைப்புக்கான உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு‌ பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஓய்வுபெற்ற நீதிபதிகள், கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதித் துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் கடந்த மார்ச் 23ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.