தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. எங்கு காணினும் மக்கள், தெருக்களில் காலியான குடங்களோடு தண்ணீர் லாரிக்காக காத்திருக்கிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதால் காலப்போக்கில் இந்தநிலை இன்னும் மோசமாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன. அதிக வெப்பத்தின் காரணமாக கோடைவிடுமுறைக்குக்கூட குழந்தைகளை பெற்றோர்கள் சிலர் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. பலவகையில் நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் மருத்துவர்கள் குளிர்ச்சியான உணவுமுறையை கடைபிடிக்கும்படி அனைத்து தொலைகாட்சிகளிலும் அறிவுரை வழங்குகின்றார்கள்.

தமிழ்நாட்டின் நிலைமை இப்படி இருக்க, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று அதிகமாக மாசடைந்து வருகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே தொடர்ந்து உள்ளதாக, சபர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாகன புகை அதிகரிப்பு, அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் அவ்வப்போது குறைந்து வருகிறது. காற்றில் கலந்துள்ள மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவு புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து செய்யப்படுகிறது. ஆனாலும் காற்று மாசு குறையவில்லை.

மத்திய அரசின் கீழ் செயல்படும் சபர் வானிலை மையம் கூறியுள்ள தகவலில் காற்றின் தரத்தை உறுதிசெய்யும் அளவுகோலில், காற்றுத் தரக்குறியீடு எண் 339 என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசம் என்கிற பிரிவின்கீழ் வரும்.

அதாவது காற்றின் தரக் குறியீட்டைப் பொறுத்தவரை 0 – 50 நல்லது என எடுத்துக்கொள்ளப்படுகிறது. 51 – 100 திருப்தியான நிலை என்றும், 101 – 200 பரவாயில்லை என்றும், 201 – 300 வரையிலான அளவீட்டை மோசம் என்றும், 301 – 400 மிக மோசம் என்றும், 401 – 500 என்ற அளவு பதிவானால் ஆபத்து என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேசியளவில் ஆண்டு தோறும் சுமார் 15 லட்சம் மக்கள் காற்று மாசினால் இறப்பதாகவும், காற்று மாசுபாடுதான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரபிக் கடலிலிருந்து ஈரப்பதம் இருந்து காற்று வயதின் காரணமாக வடமேற்கு இந்தியாவில் அதிகமான இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் டெல்லி உட்பட வட மேற்கு இந்திய பகுதிகளில் இடி மழை பெய்யும் வாய்ப்புகள் திடீரென தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

என்னதான் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலும் உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, சந்தை மயமாதல், காடுகளை அழித்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்க மறுத்தல், அதிக பிளாஸ்டிக் கழிவுகளை சேமித்தல் என பிரச்சினை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. முடிந்தவரை மக்கள் இயற்கையின் மகிமையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் பெரிய கொடை.