பிரதமர் நரேந்திர மோதி கடந்த செவ்வாய் கிழமை இரவு 8 மணி அளவில் கொரானா நோய் தடுப்பு காரணமாக தேசம் தழுவிய 21 நாள் முழு அடைப்பு அறிவிப்பை வெளியிட்டார். முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென வெளியிடப்படும் அரசின் அறிவிப்புகள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு அலிகார் நகரை சேர்ந்த தினக்கூலி பண்டி என்பவரின்  வாழ்க்கை ஒரு மிகச் சரியான உதாரணம்.

உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகார் நகருக்கு அருகிலுள்ள கிராமத்தை சார்ந்தவர் பண்டி. தனது  வாழ்வாதாரத்திற்காக மனைவி மற்றும் குழந்தையுடன் டெல்லிக்கு இடம்பெயர்ந்து  தனக்கு தெரிந்த வேலைகளின் மூலம் பொருள் ஈட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி மோதி அவர்கள் அறிவித்த 21 நாள் முழு அடைப்பு  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை  புரட்டி போட்டிருக்கிறது.

திடீரென்று அறிவிக்கப்பட்ட முழு அடைப்பால்  பேருந்துகளும், இரயில்களும் முழுமையாக நிறுத்தப்படுகின்றன. தினசரி செய்து வந்த வேலைகளின் மூலம் கிடைத்த வருவாயும் நின்று போன காரணத்தால் டெல்லியில் வசிப்பது கடினமாக இருக்குமென பண்டி கருதுகிறார். பொருள் உதவியோ பண உதவியோ அல்லது உணவோ வழங்குவதற்கு ஒருவரும் இல்லை என்ற சூழலில் பண்டியின் மனைவியும் கிராமத்துக்கு செல்லும் முடிவை எடுக்கின்றனர். பண்டி தனது குடும்பத்துடன் டெல்லியிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அலிகார் நகருக்கு அருகிலிருக்கும் தனது கிராமத்திற்கு செல்லும் முடிவை எடுக்கிறார்.

மாநில.மாவட்ட எல்கைகளை அரசு அடைத்துவிட்ட செய்தியெல்லாம் பண்டிக்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

பேருந்துகளும் வாகனங்களும் இயக்கப்படவில்லை என்ற சூழலில் டெல்லியில் வசிப்பதற்கும் வாய்ப்பில்லை என்ற சூழலில் பண்டியும் அவரது குடும்பத்தினரும் கால் நடையாகவே 150 கிலோமீட்டர் பயணத்தை தொடங்கிவிட்டனர். வழியில் பண்டியைப் போலவே சில குடும்பத்தினரும் அவரோடு சேர்ந்து பயணித்தனர். கால் நடையாக நடக்கத் தொடங்கியவர்களை  எல்லைகளைத் தாண்ட  காவல் துறையும் மருத்துவ துறையும் வருவாய் துறையும் அனுமதி வழங்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் அதே இடத்தில் மிச்சமிருக்கும் நாட்களை எப்படி பண்டியின் குடும்பம் கடக்கும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி தான். 150 கிலோமீட்டர் பயணம் குறைந்தது இரண்டு நாட்களை முழுமையாக எடுத்துக் கொள்ளும். ஆறு வேளை உணவுக்கும் குடிதண்ணீருக்கும் முழு அடைப்பு காலங்களில் பயணிக்கின்ற குடும்பங்கள் என்ன செய்வார்கள் என்பதும் தெரியவில்லை.

ஊரெங்கிலும் காவல்துறையினர் அத்யாவசிய தேவைகளுக்கு பொருட்களுக்கு வெளியில் வருபவர்களை தடிகளைக் கொண்டு அடித்து தள்ளுகிறார்கள். பெரும் அச்சங்களை ஏற்படுத்தி எந்த நம்பிக்கையை உருவாக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதன் உச்சமாக பணிக்கு சென்று திரும்பிய மருத்துவரை தடி கொண்டு அடிக்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி.

அரசு வழங்கும் நிவாரணங்கள் இனிமேல் தான் மக்களை சென்றடையும். ஆனாலும் அது பண்டி போன்றவர்களுக்கு உதவுவதற்கு வாய்ப்பில்லை. வாரணாசி தொகுதி மக்களிடம்  பாரத பிரதமர் ஒவ்வொருவரும்  9 குடும்பங்களை 21 நாட்களுக்கு பார்த்துக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டு கொண்டிருக்கிறார். அந்த 9 குடும்பங்களை  தேர்வு செய்வதற்கு ஆளும் பாஜக அரசு கடந்த காலங்களில் வழிகாட்டியது  நினைவிலிருக்கிறது. கிடைத்த தருணங்களிலெல்லாம் மனித நேயத்தை  கொன்று குவித்துவிட்டு கொரனாவிடம் மண்டியிட்டிருக்கும் அரசு சகமனிதர்களிடம் அன்பையும் சகோதரத்துவத்தையும்  வளர்த்தெடுக்க சொல்வதற்கு எவ்வளவு நினைவு தப்பியிருக்க வேண்டும்?

வரும் நாட்களில் இந்த தேசம் எதிர்கொள்ளும்  மக்கள் சார்ந்த  பிரச்சனைகளுக்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த முழு அடைப்பை  பிப்ரவரி மாதத்தில்  முன்னறிவிப்புடன் செய்திருக்கவேண்டும்.

-கோகுல கிருஷ்ணன் கந்தசாமி