தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐயின் நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

கடந்த ஆண்டு (2018) மே 22ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2018, மே 28ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. அத்துடன் விசாரணையை 4 மாத காலத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது நீதிமன்றம். மாதங்கள் பல கடந்தும் விசாரணை முடிவடையவில்லை.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்டு சிபிஐ இயக்குநர் சார்பில் டிஎஸ்பி ரவி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவுபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்புடைய 222 வழக்குகளையும் ஒரே வழக்காகப் பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ 2018 அக்டோபர் 8இல் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இதுவரை வழக்கு தொடர்பாக 160 ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அதில் நூறு ஆவணங்களுக்குப் பதில் பெறப்பட்டுள்ளது. 300 பேரிடம் விசாரித்துள்ளோம். மொத்தம் 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்பதால் கால அவகாசம் வேண்டுமென சிபிஐ இயக்குநர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. எனவே மீண்டும் கால அவகாசம் தேவையில்லை” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”சிபிஐ விசாரணை சம்பந்தமாகக் குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. ஆகையால் இந்த வழக்கிலும் விசாரணை முடிப்பதற்குக் கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது” என உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.