சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் கள்ள உறவின் காரணமாக கொலை செய்யப்பட்டதையடுத்து அவ்வழக்கு நேற்று(06.03.2019) விசாரணைக்கு வந்த நிலையில், இதுபோன்ற கொலைகள் நடப்பதற்கு தொலைக்காட்சி தொடர்களும் சினிமாக்களும் ஒரு காரணமாக உள்ளனவா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வழக்கு  நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தோஸ் கூட்டு அமர்வின் முன் விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் 20 கேள்விகளை   மத்திய மாநில அரசுகள் எதிராக எழுப்பி அதற்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கேள்விகள் பின்வருமாறு :

 1. தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எத்தனை கொலைகள் கள்ள உறவு காரணமாக நிகழ்ந்துள்ளன?
 2. இதுவரை எத்தனை குற்றங்கள் அதாவது கொலைகளை தவிர்த்து தற்கொலை, கடத்தல் மற்றும் தாக்குதல் போன்றவை நடந்துள்ளன?
 3. தகாத உறவுகள் காரணமாக ஆண்டுதோறும் அதிகப்படியான குற்றங்கள் நிகழ்கின்றதா?
 4. நம் நாட்டில் மெகாத் தொடர்களும் சினிமாக்களும் கள்ள உறவு மேற்கொள்ள முக்கிய காரணமாக இருக்கின்றனவா?
 5. மெகாத் தொடர்களும் சினிமாக்களும் கள்ள உறவு தொடர்பாக நிகழத்தப்படும் கொலைகளுக்கு வழிவகுக்கின்றனவா?
 6. தன் துணையிடம் இருந்து விடுப்பட கூலிப்படைக்கு பணம் கொடுக்கப்படுகின்றதா?
 7. கணவன் மற்றும் மனைவியின் பொருளாதார சுதந்திரம் அதிகப்படியான கள்ள உறவுகளுக்கு வழிவகுக்கின்றது என கூறப்படுவது உண்மையா?
 8. துணையின் குறைப்பாடும் ஒழுங்கின்மையும் கள்ள உறவு அதிகரிப்புக்கு காரணமாக கருதப்படுவது உண்மையா?
 9. முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அந்நியர்களிடம் தொடர்புக் கொள்ள பல வாய்ப்புகளை வழங்குகின்றதா?
 10. இதுபோன்ற உறவுகள் அதிகரிக்க மேற்கத்திய கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் காரணமாக உள்ளனவா?
 11. ஆண்களின் முட்டாள்தனமும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதும் இதுபோன்ற உறவுகளை அதிகரிக்கின்றதா?
 12. துணையுடன் நேரம் செலவு செய்யாமல் இருப்பது, உளவியல் ஆதரவு பெறாமல் இருப்பது இவ்வுறவு மேற்கொள்ள காரணமாக இருக்கின்றதா?
 13. வெளி உலகம் பற்றி அறிய, கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி தங்களுடன் பணிப்புரியும் மூன்றாம் நபரிடம் பழகுவது இவ்வுறவுகளுக்கு காரணமாக அமைகின்றதா?
 14. கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தனிக்குடும்ப அமைப்புக்கு மாறுவதும் ஒருவகை காரணமா?
 15. தார்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகள் பற்றி பள்ளிகளில் கற்றுத்தராமல் இருப்பதல் இதுபோன்ற சமூகத்தீமைகளுக்கு நடக்க காரணமாக உள்ளதா?
 16. மணமக்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பதும் ஒரு காரணமாக உள்ளதா?
 17. திருமண ஜோடி பொருந்தாமையும் ஒருவகை காரணமாக உள்ளதா?
 18. எம்மாதிரியான சமூகவியல்.உளவியல் மற்றும் பொருளாதார காரணிகள் இவ்வுறவுகள் அமைய பொருப்பாக உள்ளன?
 19. இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் பார்த்து கொண்டு அதனால் நடத்தப்படும் கொலைகளைத் தடுத்து அவர்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு குழுவை அரசு அமைக்காமல் இருப்பது ஏன்?
 20. இப்பிரச்சனைகள் தொடர்பாக தன் துணையை ஒவ்வொரு மாவட்டதிலும் அமையப் பெற்றிருக்கும் குடும்ப ஆலோசனை கழகத்திற்கு அழைத்துச் செல்லாமல் இருப்பது ஏன்?

கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 141 கொலை வழக்குகளில் 90 கொலைகள் கள்ள உறவுகளால் நடந்தவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2015 ஆம் நடந்த 129 கொலைகளில் 91 கொலைகள் மற்றும் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலைகளில் 50 கொலைகள் கள்ள உறவாலேயே நடத்தப்பட்டவை என ஆய்வுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜோசப் கொலை வழக்கு மனுவை ஜுன் மூன்றாம் வாரம் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.