ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் பரோல் கோரிய மனுக்குவுக்கு தமிழக அரசுப் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், மூன்று பேருக்குத் தூக்குத்தண்டனையும், நால்வருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கூறி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். அதைதொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தங்களை விடுதலை செய்யமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்றமும் இதுகுறித்த முடிவைத் தமிழக அரசு எடுக்கலாமெனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. தமிழக அரசு ஏழு பேரையும் விடுதலை செய்யக் காலதாமதம் செய்கிறது.

இந்நிலையில், வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ”ஆயுள் தண்டனை கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்கச் சிறை விதிகளில் உள்ளது. அப்படி இருந்த போதிலும், 27 ஆண்டுகளாகத் தனக்கு பரோல் வழங்கப்படவில்லை. எனது மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த மனுமீதான விசாரணையில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாரயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாகத் தமிழக அரசு வரும் ஜூன் 11ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் அவசரமாகப் பரோல் தேவை என்றால் உயர்நீதிமன்ற விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.