பெங்களூரில் இருக்கும் எந்த ஒரு பள்ளியிலும் மதிய உணவுகளில் வெங்காயம் பூண்டு சேர்க்கப்படுவதில்லை.

கர்நாடக அரசு, (ISKCON) இஸ்கான்  அமைப்பின் கிளையான அக்க்ஷயா பட்ரா (APF)  அறக்கட்டளையுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த அறக்கட்டளை இவ்விரண்டு உணவுப் பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம் என அறிவித்தும் இது நடந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதே கர்நாடக அரசு மதிய உணவுகளில் வெங்காயம் பூண்டு சேர்க்கவேண்டும் என்ற தன் முடிவிலிருந்து பின்வாங்கி இந்த ஒப்பந்தம் போட்டதுதான்.

கடந்த நவம்பரில் பள்ளிக் கல்வித்துறை அக்க்ஷயா பட்ரா அறக்கட்டளைக்கு (APF)  வெங்காயம் பூண்டு சேர்க்கச்சொல்லி உத்தரவிட்டு அதை அந்த அமைப்பு செயல்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது.

பெங்களூரில் மட்டும், APF தினமும் ஏறத்தாழ 1,212 பள்ளிகளைச் சேர்ந்த 1,83,000 மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கிறது.

இந்த நிறுவனம் வெங்காயம் பூண்டு போன்றவற்றைச் சேர்க்கமாட்டோம் என்று முன்னரே அறிவித்தாலும் மாற்று ஏற்பாடுகள் செய்யக் கால அவகாசம் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி நாங்கள் அந்த நிறுவனத்துடனேயே தொடரும் நிலை உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் அறிக்கையில், APFஅமைப்பின் உணவுகள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உணவு விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன எனக் கடந்த கடந்த பிப்ரவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CFTRI (மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்) வெங்காயம் பூண்டு ஆகியவற்றில் இரும்பு மற்றும் ஜிங்க் சத்துகள் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டாலும் இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைச் செயலாளரும் முதன்மைச் செயலாளரும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கர்நாடக மதிய உணவுத் திட்ட இயக்குநர் மூர்த்தி கூறினார்.

அரசின் இந்த முடிவு கர்நாடக மக்களிடமும், சுகாதார நிபுணர்களிடமும்   பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. அவர்கள் அக்க்ஷயா பட்ரா   உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறார்கள்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகம், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்குத் தினமும் 450 கலோரி சத்துள்ள உணவும் 12 கிராம் ப்ரோட்டீனும் தேவை. உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தினமும் 700  கலோரி சத்துள்ள உணவும் 20 கிராம் ப்ரோட்டீனும் தேவை என விதிமுறைகள் விதித்துள்ளன.

மாநில உணவு ஆணையத்துக்கு வந்த தகவலின்படி வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத உணவு மாணவர்களுக்கு பழக்கமில்லாததால் அவர்கள் உண்ண மறுக்கிறார்கள் என்று. இது தான் இந்த விவகாரத்தில் பெரும் பிரச்சனையே என மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் சில்வியா கற்பகம் குறிப்பிடுகிறார். அவர் மேலும், “உணவில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை என்பது ஒரு கலாச்சார விதி தான்” என்றார்.

வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சரியான ஊட்டச்சத்து சரியான வயதில் தரப்படவேண்டும். உணவு அமைப்புகளும், நிபுணர்களும் பலமுறை இதைச் சுட்டிக்காட்டியும் அரசின் மெத்தனத்தினாலும், உணவு மற்றும் கலாச்சார அரசியலாலும் பாதிக்கப்படுவது குழந்தைகளே.