வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்ததுள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதில், 2005ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பிலிருந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த நிலங்களை பட்டாவாக வழங்க உரிமை கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தினால் மிகப்பெரிய அளவில் வனங்கள் அழிக்கப்படலாம் என வைல்டுலைப் பர்ஸ்ட் என்ற அமைப்பு தெரிவித்திருந்தது.

பழங்குடியினரை வெளியேற்ற உத்தரவு

வனங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் வன உரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு, ”தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் தங்களது சொந்த சட்டத்தை பயன்படுத்தி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 13ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் பழங்குடியினர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

சமூகநீதிக்கு எதிரானது

மத்திய அரசின் பழங்குடியினர் நலத் துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வனப்பகுதியுடன் தொடர்புடைய பழங்குடியினரை திடீரென வெளியேற்றுவது சமூகநீதிக்கு எதிரானது என்றும் பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவை பல்வேறு மாநில அரசுகள் எதிர்க்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த மனு நேற்று (பிப்ரவரி 28) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் மனுவை ஏற்கொண்ட நீதிபதிகள், வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவை தற்போது நிறுத்திவைத்துள்ளனர். அத்துடன் வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியினர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.