மிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரச் சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு நேற்று (மார்ச் 12) மாற்றப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் நேற்று முதல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்

பொள்ளாச்சியில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகப் பதிவுசெய்து பணம், நகை கேட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இந்தக் கும்பல் பெண்களை சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பார்பவர் மனதை கலங்கவைக்கும் அந்த வீடியோ, தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும்  திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களை மிரட்டியதாக 4 பேர் என மொத்தம் 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜாமீன் மனு தள்ளுபடி

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவின் தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆளும்கட்சியின் ஆதரவு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களும் பரப்பப்படுகிறது.

சிபிசிஐடி விசாரணை

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்தக் குற்றவழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யவேண்டும் எனவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த இந்திய மாணவர் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர். இதேபோன்று திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டன போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நேற்று பேரணி நடத்தி பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், “இந்த வழக்கில் கால தாமதமில்லாத நீதி வழங்க வேண்டும்; புகார் அளித்த, பாதிக்கப்பட்ட பெண்களின் ரகசியம் காக்கப்பட வேண்டும்” என்று கவிஞர் சினேகனும், “பொள்ளச்சி பாலியல் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாகவே பார்க்கிறேன்” என்று நடிகை ஸ்ரீப்ரியாவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மாலை 4 மணியளவில் பொள்ளாச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த் துறை அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கூறுகையில் தனக்குத் தெரியவில்லை என்றும் தகவல் அறிந்து சொல்வதாக கூறினார். எம்.பி கனிமொழி தலைமையில் நேற்று மாலை பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிபதிகள் வேதனை 

“டெல்லியில் நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏன் தரப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள்,  “தேசிய ஊடகங்கள் நகர்ப்புற பகுதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊரகப் பகுதிகளுக்கு கொடுக்காமல் புறக்கணிக்கின்றன” என்று வருத்தம் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

பொள்ளச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில்,  தமிழக அரசும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் பெரும் பூதகரமாக வெடித்துள்ள நிலையில், நேற்று முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.