மாநில அரசுகள் தன்னிச்சையாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது என்றும் யுபிஎஸ் மட்டுமே தகுதியின் அடிப்படையில் டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்றும் அதிரடியாக இன்று (மார்ச் 13) தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

டிஜிபி நியமனம் கட்டுப்பாடுகள்

நாடுமுழுவதும் டிஜிபி நியமனம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை வகுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், டிஜிபியின் பதவி காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த டிஜிபியாக நியமிக்க விரும்புவர்களின் பெயர்களை யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் எஞ்சியிருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை மட்டுமே டிஜிபி பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைதான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் இடைக் கால டிஜிபியாக யாரையும் பதவியில் அமர்த்தக் கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை வித்திதது உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உத்தர பிரதேச மாநில முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் என்பவர் கடந்த ஜுலை மாதம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவால் மூத்த அதிகாரிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், சில மாநில அரசுகள் உத்தரவைத் தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுயமாக நியமிக்க முடியாது

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (மார்ச் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவிக்காலம் ஆறு மாதங்கள் எஞ்சி இருந்தாலே, பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்க மாநில அரசுகள் அவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஓய்வுபெற இரண்டு ஆண்டுகள் இருந்தால்தான் டிஜிபியை நியமிக்கலாம் என்ற விதியை தளர்த்தி உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.  மேலும், மாநில அரசு டிஜிபிக்களை சுயமாக நியமிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் யுபிஎஸ்சி மட்டுமே தகுதியின் அடிப்படையில் டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்று உத்தரவிட்டுள்ளனர்.