வெறுப்புணர்வை தூண்டும் விதமான ஆபத்தான வீடியோ மற்றும் ஆடியோக்களை யூ-டியூப்பிலிருந்து நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் பேசிய சுந்தர் பிச்சை, “நாங்கள் வெறுப்புணர்வு தூண்டக்கூடிய வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க வேண்டும் என்று கொள்கை முடிவெடுத்துள்ளோம். அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வீடியோ பதிவுகள் யூ டியூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இப்பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமூக தளங்களில் ஒன்றான யூ டியூப்பில் மதம், மொழி, இனம், நாடு உள்ளிட்ட பிரிவுகளில் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் அதிகளவில் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் அவற்றை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ-டியூப் நடவடிக்கை எடுத்து வருவதாகச் சுந்தர் கூறினார்.