காதல் படங்களில் இது ஒரு தனி ரகம், காதலர்களின் இதயத்திற்குள் எப்போதும் தொக்கிநிற்கும் ஒரு படம், கடந்த 20 ஆண்டுகளில் வெளியான காதல் படங்களிலேயே சிறந்த படமாக விளங்கும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைக் காவியம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகிறதாம்.

காதல் ஒரு உணர்வுதான் என்றாலும் எத்தனைக் கலவையான உணர்வுக் குவியல்களை இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியதென்பது அனைவரும் அறிந்ததே. படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் எங்கோ ஓர் காதலன் அல்லது எங்கோ ஓர் காதலி இன்னும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவதுபோல் உலகில் எங்கோ ஓர் மூலையில் காதலால் பிரிவதும் இணைவதும் நடந்தபடிதான் இருக்கிறது. திரையில் தான்காணும் காட்சிகள் பார்வையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நெருக்கமாக அல்லது முடிந்தவரை அவனது அந்தரங்கத்தை தொட்டு சென்றால்போதும் அந்தப் படத்தின் வெற்றிக்கு பார்வையாளர்கள் முழு பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அப்படி தமிழ் ரசிகர்களின் இதயத்தை வருடிய படமாக விண்ணைத்தாண்டி வருவாயா அமைந்ததற்கு ‘சேராத காதல்’ மட்டும்தான் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

2003ஆம் ஆண்டு சிம்பு, திரிஷா ஜோடி நடித்து ‘அலை’ என்ற படம் வெளியாகி சரியான வரவேற்பைப் பெற தவறுகிறது. அந்த அலை அடித்ததோ இல்லையோ கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்த அலையானது தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை அடித்து துவைத்தது.

வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்ற தொலைநோக்கு கவலையில் மூழ்கியிருக்கும் நாயகன் கார்த்திக்கு, அன்று வாசல்வழி தென்பட்ட ஜெஸ்ஸி என்ற புயல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. ஒட்டுமொத்தமாக தலைகீழாகப் போட்டுத் திருப்புகிறது. அங்கிருந்து மெல்ல ஆரம்பிக்கும் படம் இருவரின் முழுக் காதலில் அலைமோதி ஆர்ப்பரிக்கிறது. எத்தனை ஆயிரம் உதவி இயக்குநர்களின் சாயலில் கார்த்திக் இருந்தான். எத்தனை ஆயிரம் புரிந்துகொள்ள முடியாத பெண்களின் நிலையில் ஜெஸ்ஸி தென்பட்டாள். திரையில் காண்பது படம் என்பதைத்தாண்டி காதலுக்காக இந்த ஜீவன்கள் இப்படிப் படாதபாடு படுகிறதே என்று எத்தனை உள்ளங்கள் பரிதவித்தன.

படத்தில் நிறைய உளவியல் சிக்கல்கள் இருந்தாலும், காதல் என்றாலே பைத்திய சிந்தனையின் தெளிந்த நீரோடைதானே. அவ்வப்போது ஜெஸ்ஸியின் முடிவைக் கண்டும் தடுமாறும் நாயகனின் நிலைதான் எப்போதும் ஆண்களின் நிலையாக இருந்திருக்கிறது. பெற்றோர் நிச்சயித்தவனா? அல்லது தன்னை விரும்புகிறவனா? என்று ஜெஸ்ஸியின் மனநிலையில்தான் இன்றும் திருமணத்திற்கு முன்பாக பல பெண்களின் நிலையாக இருக்கிறது.

எப்போதும் வாழ்வின் தீராத ஆசைகளை நமக்குப் பிடித்தவர்கள் அருகில் இருக்கும்போது சொல்லும் கணம் எவ்வளவு மகத்துவமானது. ஜெஸ்ஸி, கார்த்திக்கிடம் காதலைச் சொல்லும் காட்சி, பின்னே அலையாய் எழும் ரஹ்மானின் இசை மற்றும் ‘மன்னிப்பாயா’ என்ற ஓலம்  அதில் கரைந்த நெஞ்சங்கள் ஏராளம்.

இறுதியில் வாழ்க்கை போன போக்கில் எங்கோ ஓர் மூலையில் புது கணவன் அல்லது மனைவியுடன் இன்பத்தின் தொடக்கத்தில் இருக்கும்போது எதிரே வந்து நிற்கும் முன்னாள் காதலனோ அல்லது காதலியையோ நினைத்து கண்களின் நீர் தேங்காத கண்கள்தான் இந்தப் பூமியில் காணமுடியுமா?

“அவதா இருக்கா என் வாழ்க்கைல..

ஆனா அவளுக்கு நா இல்ல..

அவளுக்கு அவ அப்பா, அம்மானா ரொம்ப புடிக்கும்.. நா… தப்பா சொல்லல நல்ல விசயம்தான். எவ்ளோ பேர் அந்தமாதிரி இந்த காலத்துல இருக்காங்க..

அவங்க என்ன ஒத்துக்கமாட்டாங்கனு தெரிஞ்சி என்ன வேணானு சொல்லிட்டு போயிட்டா…”

படத்தின் கிளைமாக்ஸில் வரும் வசனம் இது. பொதுவாக பிரிந்த காதலின் வலிதான் மிகப்பெரிய வெற்றியைத் திரைமொழிக்கு தரும். அதை இந்தப் படமும் நிரூபித்தாலும், இயக்குநரின் திறமை மூலம் படத்தினுள் வரும் படத்தில் காதல் ஜோடிகளை இணைத்திருப்பார்.

10 ஆண்டுகளென்ன நூறு ஆண்டுகளானலும் இந்தப் படம் காதல் நெஞ்சங்களுக்கு சிறந்த படமாகவே இருக்கும். இப்படி ஒரு படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்கள்