விருதுநகர் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்டுவந்த 21 மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபொருமாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”விருதுநகரில் மாவட்டம் வறட்சி நிறைந்த பகுதி. இங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிறைய மினரல் வாட்டர் கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன.

இதில், 21 மினரல் வாட்டர் கம்பெனிகள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. மேலும் சில கம்பெனிகள், அரசு அறிவித்த அளவைவிடச் சட்டவிரோதமாக அதிகளவு நிலத்தடியிலிருந்து தண்ணீர் எடுக்கின்றன. முறையாக அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நிதிபதிகள் நிஷாபானு, தண்டபானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மே 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான அனுமதியின்றி செயல்பட்டுவந்த 21 மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கும் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.