எளிமையான நடிப்பு, கதைக்கேற்றார்போல கதாபாத்திர தேர்வு, என நடிப்பில் பலவகையில் தன்னை நிரூபித்துக்காட்டிய பார்வதி தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

தமிழில் ‘பூ’ படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி  சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் என பல படங்கள் நடித்திருக்கிறார்.  சமீபத்தில் மீடூ விவகாரத்தில் சில நடிகர்களை தாக்கி கருத்து தெரிவித்ததையடுத்து அவருக்குப் படவாய்ப்புகள் குறைந்தன. தனக்கு வரும் பட வாய்ப்புகளை சிலர் தடுப்பதாக அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான்விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டியிருந்ததால், தானே இயக்குநர் ஆவப்போவதாக  முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘மிக விரைவில் நான் டைரக்‌ஷன் செய்ய விருக்கிறேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்றார்.

நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ், நந்திததாஸ் ஆகியோரைத் தொடர்ந்து பார்வதியும்  இயக்குநர் அவதாரம் எடுப்பது குறிப்பிடத்தக்கது.