நாட்டுப்புறக்கலையை காலம் காலமாக அழியாமல் காத்துவரும் நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்க்கையானது வறுமையால் நிறைந்ததாகவே உள்ளது. எல்லா நாட்டுப்புறக்கலைஞர்களும் சுகமாக வாழ்ந்து வருவதில்லை என்பதை நாட்டுப்புறக்கலைஞரும், பின்னணி பாடகியுமான பரவை முனியம்மாளின் தற்போதைய நிலை நிரூபிக்கின்றது.

மதுரை அருகே பரவை பகுதியில் வசித்து வரும் பரவை முனியம்மா ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். இவர் ’தூள்’,’வீரம்’, ’மான் கராத்தே’ உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் ’போக்கிரிராஜா’, ’ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’ போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார். லண்டன், சிங்கப்பூர், மலேசியா உட்பட 2000 மேடைக்களுக்கும் மேல் ஏறி பாடியுள்ளார்.

கம்பீர குரலால் பாடி, நடித்து அசத்திய இவருக்கு  தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவித்தது. இதற்காக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு பரவை முனியம்மா நன்றி தெரிவித்துள்ளார்.  கணவனை இழந்து, மன வளர்ச்சி குன்றிய மகனுடன் வாழ்ந்து வரும் இவருக்கு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது  6 லட்ச ரூபாய் கொடுத்ததாவும், அதன் மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை கொண்டே வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.   ஜெயலலிதா கொடுத்த நிதியுதவியை தனக்கு பின்பு மகனுக்கு தொடர்ந்து வழங்கி உதவிடுமாறு  தமிழக அரசுக்கு பறவை முனியம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.