நாங்களா உங்களை தனுஷுக்காக கட்-அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்யச் சொன்னோம் என்று ஆணவத்தோடு பேசிய டச்-அப் மேன் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனுஷ் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்து வெளிவர இருக்கும் தனுஷின் படங்கள்  அனைத்திற்கும் ரசிகர்கள் கொண்டாட்டமே  இல்லாத படமாக இருக்கும்  எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் தனுஷ், அசுரன் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.  இந்நிலையில் அவர் ரசிகர்களை மறந்துவிட்டதாக கூறி கண்டன போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் உள்ள  சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது, “இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா? என ஆரம்பத்தில் பல அவமானங்களைத் தாண்டி நின்றவர்கள் நாங்கள். ரசிகர்களை  நீக்குவதற்கு சிவாவும் ராஜாவும் யார்? பல தோல்விகளிலும் என்னை தாங்கிப் பிடித்த தூண்கள் என் ரசிகர்கள். அவர்களை  எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன் என்று சொன்னாயே தலைவா. ஆனால் உங்களுக்காக உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா? ”என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் அதில். “நாங்களா உங்களை தனுஷுக்காக கட்-அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்யச் சொன்னோம் என்று ஆவணத்தோடு பேசிய டச் அப் மேன் ராஜா மீது நடவடிக்கை எடு. தலைவன் தனுஷ் நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாத படமா என சொல்ல வைத்துவிடாதீர்கள். நீங்கள் மறந்தால் போராட்டம் வெடிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.