தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 79.

பொழுதுபோக்கு, ஜனரஞ்சக அம்சங்களை மட்டுமே கொண்டு உருவாகிவந்த தமிழ் சினிமாவில் தனது திரைப்படங்களின் மூலம் புதிய அலையை உருவாக்கியவர் இயக்குநர் மகேந்திரன். இவரது இயக்கத்தில் உருவான உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற அற்புதமான படைப்புகள் இன்றும் தமிழ் சினிமாவின் சிறந்த அடையாளங்களாக விளங்குகின்றன.

தனது தனித்துவமான படங்களை இயக்குவதற்கு முன்பே திரைத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த மகேந்திரன் பல திரைப்படங்களுக்கு கதையமைத்திருக்கிறார்.

கலைத்தன்மையுள்ள யதார்த்த சினிமா ஆகட்டும், ஜனரஞ்சக உள்ளடக்கங்கள் கொண்ட திரைப்படங்களிலும் சரி, அதில் தனது தனித்துவ பாணியை கையாண்டவர் மகேந்திரன். பெண்களின் உளவியலை நுட்பமாக வெளிப்படுத்தும் வகையில் தனது படங்களில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் மகேந்திரன் எப்போதுமே தனித்து நிற்கிறார்.

இந்நிலையில், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார்.