‘விஸ்வரூபம் – 2’ வெளியான பிறகு கமல்ஹாசன் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தில் நடிக்கப்போகும் தகவல் பெரும் கவனம் பெற்றது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த ‘இந்தியன் – 2’ திரைப்படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துப் பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பு, அனிருத் இசை, முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் என ‘இந்தியன் – 2’ தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அதனோடு முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றது.
ஆனால், சில சிக்கல்களால் ‘இந்தியன் – 2’ படப்பிடிப்பு இடைநின்றது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. கமல்ஹாசனும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம், இடைத்தேர்தல் பிரச்சாரம் என பிஸியாகிவிட்டார்.
இதன் பிறகாவது ‘இந்தியன் – 2’ பற்றி நம்பிக்கையளிக்கும் தகவல் எதுவும் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘பிக் பாஸ் 3’ அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின.
இந்நிலையில், ‘இந்தியன் – 2’ தயாரிப்பிலிருந்து லைக்கா நிறுவனம் பின்வாங்கியதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. எனினும் படத்தை இயக்குவதில் உறுதியாக இருக்கும் ஷங்கர் ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்களிடம் பேசிவருவதாகவும் கூறப்பட்டது.
தற்போது வெளியாகியிருக்கும் கடைசி தகவலின்படி, லைக்கா நிறுவனமே ‘இந்தியன் – 2’ திரைப்படத்தை தொடர்ந்து தயாரிக்கவுள்ளதாகவும், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி 2021 தொடக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.