கதையின் செல்திசை எப்போதும் முன்தீர்மானங்களுக்கு உட்பட்டது. எழுதிய கதைக்கும் திரைவழி கடத்தப்படுகிற கதைக்கும் இடையிலான பெரு வித்தியாசங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கோட்பாடுகளின்படி வரைமுறைகள் இலக்கணங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படுகிற திரைப்படக் கலையில் தன்னளவில் மீறல்களுடன், கலைதல்களின் மூலமாகவும் பல்வேறு யுக்திகளைப் பரிசீலிக்கிற அல்லது அனுமதிக்கிற முயல்வுகளாகவும் அமையும்போது பரீட்சார்த்த சினிமாவாகிறது. எல்லாக் கலைகளைப் போலவும் சினிமாவும்தான் அடுத்து நகர வேண்டிய நகர்தல் திசையையும், புதிய வரைவிலக்கணங்களையும் அடுத்த காலத்திற்கான கோட்பாடுகளையும் உருவாக்க முயலுகிற மற்றும் உருவாக்குகிற தன்மையுடனானது.

இந்தியத் திரைப்படக் கலை கூத்து மற்றும் நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளின் பதிவு வடிவமாக ஆரம்பகாலம் முதலே புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. எங்கனம் சமூக வரையறைகளுக்கு உட்பட்டே முன் காலத்திய கலைவடிவங்கள் நிகழ்த்தப்பட்டு வந்தனவோ அங்கனமே அடைப்புக் குறிகளுக்குள் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்திக்கப்பட்ட சொற்களின் கூட்டு அர்த்தமாகவே சினிமாவும் இருக்க நேர்ந்தது. நூறு வருடத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் சரித்திரத்தில் இந்திய அளவில் தொடர்ந்து நம்பப்பட்டு வருகிற திரையாக்க பெரும்பாலானவை மக்களின் ரசனை சார்ந்து எடுக்கப்பட்ட முன்முடிவுகள் ஆகவே இருப்பது தெளிவு. இன்றளவும் கதை என்பது அதன் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இயங்கக் கூடியதாக இருக்கிறது சிலவற்றை மீறுவது ஊறாகும் என்றபோதும் பெரும்பாலான நம்பிக்கைகள் திரை வணிகம் சார்ந்த தொடர் நம்பகத்தின் நிர்ப்பந்தங்களே இந்த நவீன காலத்திலேயே படத்தின் மைய இழையை தாண்டி பெரிய அளவில் மாற்றத்தையோ புரட்சியோ திரைப்படத்தால் நிகழ்த்திவிட முடியாது என்பது நிதர்சனம். காலம் காலமாக சொல்லப்பட்டு நம்பப்பட்டு பிடிவாதமாக பின்பற்றப்பட்டு வந்துகொண்டிருக்கக்கூடிய எந்த ஒரு விதிமுறையும் கண்டுகொள்ளாமல் மிகவும் புரட்சிகரமாக சற்றேறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ரத்தக்கண்ணீர் இந்தியாவின் இதுவரையிலான மிகச்சிறந்த பத்துப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் ரத்தக் கண்ணீருக்கு இடம் இருக்கும். தமிழில் முறியடிக்கப்படாத முதலிடத்தில் இன்றளவும் வீற்றிருப்பதும் ரத்தக்கண்ணீர்தான்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற ஒரு கோட்டை எடுத்துக்கொண்டு மனம் திருந்தினால் மார்க்கம் உண்டு என்பதுபோன்ற பல கற்பிதங்களை அடித்து நொறுக்கியது ரத்தக்கண்ணீர் ஆங்கிலேயன் விட்டுச் சென்ற  பிற்பாடு மேற்குத் திசைமீதான இந்திய மோகத்தை இந்தப் படத்தின் அளவு இன்னொரு படம் சாடியது இல்லை வெள்ளைக்காரன் நம்மைவிட உயர்ந்தவன் என்கிற எண்ணத்தில் தொடங்கி மேட்டிமைத்தனம் ஆக கட்டமைக்கப்பட்ட வல்லாதிக்க சிந்தனைகள் பலவற்றையும் தூள் தூளாக்கியது ரத்தக்கண்ணீர் மேடை நாடகமாக பலமுறை நிகழ்த்தப்பட்ட கதை-வசனத்தை திருவாரூர் தங்கராசு எழுத கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இதனை இயக்கினார்கள் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் இதனை தயாரித்தார் திரைப்படத்தை கலையாக பயிலுகிற ஒவ்வொருவரும் காண வேண்டிய முதல் பாடமாகவே ஆதார அரிச்சுவடி ஆகவே ரத்தக்கண்ணீர் திரைக்கதை விளங்குகிறது.

வெளிநாட்டில் படித்துவிட்டு ஊர் திரும்புகிறான் மோகன் அவன் ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. தகப்பன் இல்லாத குடும்பத்தை அவன்தான் நிமிர்த்த போகிறான் என்று காத்திருக்கிறார் தாய், வந்து சேர்பவர் முற்றிலுமாக தன்னை நாட்டு மோகத்துக்கு ஒப்புக்கொடுத்தவனாக இருக்கிறான் மெல்ல மெல்ல அவனது பலவீனங்கள் அவனைச் சார்ந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது அவனது நண்பன் பாலுவும் மோகனின் அம்மாவும் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தால் சரியாகிவிடும் என நம்புகிறார்கள் தினந்தோறும் மோகன் தேடி செல்லுவது காந்தா எனும் வஞ்சகி என யூகிக்க முடியாத கெடுமதி கொண்ட பெண்ணை. அவள் மீதான மோகத்தில் மோகன் அங்கேயே தவம் கிடக்கிறான். தனக்கு சந்திராவோடு திருமணமான பிற்பாடு மாமனாரை அவமதிக்கிறான் அம்மாவை எட்டி உதைக்கிறான் நண்பனை சுடுசொல் சொல்லி தள்ளி வைக்கிறார் மனைவியை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் பின்னால் அன்னையின் மரணத்திற்குப் பிறகும் பணப்பெட்டியோடு காந்தா வீடே கதி என்று இருக்கும் மோகனுக்கு மெல்ல ஆட்கொல்லி நோய் வருகிறது. அது ஒரு சர்ப்பத்தைப்போல அவனைப் பற்றிக் கொள்கிறது இனி அவன் தேற மாட்டான் என்று ஆகும்போது மெல்ல அவனை கைவிடுகிறாள் காந்தா.

சில மனிதர்கள் வாழ்வில் நுழைந்தால் அவர்களை வைக்கிற இடத்தில் இருத்துவது உசிதம். இல்லாவிடில் வாழ்வு என்னாகும் இருக்கும்போது கண்மண் தெரியாத ஊதாரி ஒருவன் கண் தெரியாதபோது என்னவாகிறான் கோலம் அழிகிறது மெல்ல மெல்ல கண் பார்வை போகிறது காந்தாவால் செல்வம் அனைத்தும் பறித்துக்கொள்ளப்பட்டு விரட்டி அடிக்கப்படுகிறான் மோகன். ஒரு கட்டத்தில் யாசித்து அடுத்தவர் உதவியுடன் உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் மனசாட்சியே இல்லாமல் தன் வாழ்வின் சரிபாதியை வாழ்ந்தவன் எல்லாவற்றையும் உணரும்போது காலம் கடந்துவிடுகிறது தன்னால் சந்திராவின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்பதை உணர்ந்து வேதனையுறும் மோகன் அவளை தன் நண்பன் பாலுவோடு இணைந்து வாழுமாறு வேண்டிக்கொண்டு தன் வாழ்வின் முடிவை நோக்கிச் செல்கிறான். மரணம் அவனைத் தழுவிக்கொள்கிறது ஊரில் எல்லோரும் பார்க்கும் இடத்தில் உருக்குலைந்த கோலத்தோடு மோகனின் சிலை இருக்கிறது அந்தச் சிலையின் கதையை பாலு ஊர்மக்களுக்கெல்லாம் எடுத்துரைக்கிற ஒரு புள்ளியில்தான் ரத்தக்கண்ணீர் படம் தொடங்கி முடிகிறது உலகின் நாகரீகமெனும் பெயரிலான பொய்கள் புரட்டுக்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பக்தி என்னும் பெயராலும் பந்தம் எனும் பேராலும் பலவற்றாலும் எப்படி மனிதன் கட்டுண்டு கிடக்கிறான் என்பதை எல்லாம் முதல்முறையாக இந்திய அளவில் பெரிதாய்ப் பேசிய திரைப்படம் ரத்தக்கண்ணீர்.

எம்.ஆர்.ராதா எனும் மகா நடிகனின் குரலும் முகமும் உடல்மொழியும் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் தூண்களைப்போல் ஓங்கி நின்றன. S.S ராஜேந்திரன் சந்திரபாபு எம்.என்.ராஜம் ஆகியோரின் அளவான நடிப்பு வளமாயிற்று. ஜெயராமனின் பாடல் இசையும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பின்னணி இசை ஏற்பும் இப்படத்தின் பலங்கள். வசனத்திற்கான பெரு விருப்பப் படமாக ரத்தக்கண்ணீர் இன்றளவும் விளங்குகிறது. இந்தியாவின் நடிக பள்ளிகளில் மிக முக்கியமான ஒரு ஆதாரமேதமை எம்.ஆர்.ராதா என்றால் அது மிகையல்ல. அரசியல் சமூகம் மதம் திரைப்படத்துறை உள்பட இந்தப்படம் பகடி செய்யாத விஷயமே இல்லை எனும் அளவுக்கு நம்பமுடியாத நேர்மையோடு கண்கள் முன் விரிகிறது ரத்தக்கண்ணீர்.

அற்புதம் என்றால் அது ஒருமுறை நிகழ்வது அற்புதம் என்றால் அது மீவுரு செய்ய இயலாதது.

காலம் கடந்து மிளிர்வது.

ரத்தக்கண்ணீர் ஒரு அற்புதம்