சேந்தம்பட்டி முத்தையன் தாய் வளர்த்த பிள்ளை. அன்னையே குருவாகக் கற்பித்த கரகாட்டத்தை எல்லாத் திசைகளிலும் சென்று பேரும் புகழும் பணமும் ஈட்டுகிற கலைஞன். அப்படித்தான் அந்த ஊருக்கும் திருவிழாவில் ஆடுவதற்காகத் தன் குழுவோடு செல்லுகிறான். வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த ஊரைச் சேர்ந்த கரகக் கலைஞரான நாயகி, அதனாலேயே மேலோட்டமாக நாயகனை வெறுக்கத் தொடங்குகிறாள். நம் இருவரில் யார் சிறந்தவர் என ஒரு போட்டி உருவாகிறது. இதற்கிடையில் நாயகியின் தந்தைக்குத் தெரிய வருகிறது வந்திருக்கும் நாயகன் தன் சொந்த அக்காள் மகன் என்பது. உறவெனும் உரிமை இருப்பதை அறியாமலேயே நாயகனும் நாயகியும் விரும்பத் தொடங்குகிறார்கள். நாயகியை அடையத் துடிக்கும் வில்லன், அதற்கு உதவிசெய்யும் நாயகியின் அக்காள் கணவன், அவர்களது தொடர் சதிக்குப் பின்னால் காதல் இணை ஒன்று சேருகிறது. கங்கை அமரன் எழுதி, இளையராஜா இசையமைத்து, அது வெளியானது வரைக்குமான அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்த தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றென நிரந்தரித்த கரகாட்டக்காரன் 1989ல் வெளியானது.

கொத்தமங்கலம் சுப்பு எழுதி, இலக்கியமாகவும் திரைப்படமாகவும் வெற்றிபெற்ற அபூர்வங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள். அதன் தூரத்துச் சாயல்போல் தோன்றினாலும் கரகாட்டக்காரன் சாமானியர்களின் பெரும் கொண்டாட்டமாகவே மனங்களை ஈர்த்தது. கலையை நம்பி வாழும் எளிய மனிதர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய காதலும் காதல் சார் குழப்பங்களும் இன்ன பிறவற்றுக்கெல்லாம் அப்பால் சாதாரணமான புரிதலும் மன நிறைவுமான வாழ்க்கையை அளவெடுத்துத் தைத்தாற்போல் கதைத்துக்காட்டினார் கங்கை அமரன். எளிய வசனங்களும், அபாரமான நகைச்சுவைக் காட்சிகளும், கிராமியத்தின் வெள்ளந்திப் பசுமையும், எல்லாவற்றுக்கும் மேலாக பின்னணி மற்றும் பாடல்களுக்கு ராஜா வழங்கிய இசையும் கரகாட்டக்காரன் படத்தின் சங்க நாதமாய் ஒலித்தன.

ஒன்பது பாடல்கள். எண்பதுகளின் தமிழ் மத்தியம மனசுகளின் மனோ விருப்ப வகைமைகளாகவே கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் அமைந்தது தற்செயல் அல்ல. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ‘இந்த மான் உந்தன் சொந்த் மான்’ பாடலையும் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலையும் முற்றிலும் மேற்கத்திய இசைத்துணுக்குகளைக் கொண்டு இளையராஜா தொடங்கியிருப்பதை வைத்து அவதானிக்க முடியும். இளையராஜா சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ‘மாங்குயிலே பூங்குயிலே’. இந்தப் பாடலை இளையராஜா தன் பதின்ம வயதிலிருந்தே கைப்பற்றி அழைத்து வந்து கொண்டிருந்தார். பாவலர் வரதராஜன் எழுதிய சாகாவரப் பாடல் நெடுங்காலப் பெருவிருப்பப் பாடலாக ரசிக நெஞ்சங்களைக் கட்டிப் போட்டது.
‘அல்வா சாப்பிட்றீங்களா?’ என்று கேட்பார் கோவை சரளா. ‘எனக்கே அல்வாவா?’ என்பார் கவுண்டமணி. மலினமான சில உள்ளடக்கங்கள் இருந்தன என்றாலும் இந்தப் படத்தின் நகைச்சுவை எபிஸோட் தமிழ்த் திரையுலகின் முக்கியமான சிரிப்புக் கொத்துக்களில் ஒன்றெனவே நிலைபெற்றது.

ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழங்களை வாங்கச் சொன்னதற்கு ஒரு பழத்தைத் தரும் செந்திலிடம், ‘இன்னொரு பழம் எங்கே?’ எனக் கேட்பார் கவுண்டமணி. ‘அதுவும் அதுதான்’ எனப் பதில் சொல்வார் செந்தில். முப்பது வருடங்களாகியும் பலநூறு முறைகள் நம்மைக் கடந்துவிட்ட போதும் இந்தக் காட்சி வந்தால் இன்றைக்கும் சேனல் மாற்றாமல் பார்த்துவிட்டே செல்பவர் எண்ணிக்கை பல்லாயிரம். . அந்த இணை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் மகுடத்தின் மணியெனவே இந்தப் படம் எல்லாவற்றிலும் சிறந்தது. நாதஸ் திருந்தி விட்டதாக நாதஸே சொல்லி அதை நம்பித் தலையை பிய்த்துக் கொள்வார் மணி.

திரைப்படம் பார்வையாளர்களின் கூட்டு அனுபவத்திலிருந்து தனி விருப்பமாக மாறுவது.சலனப்படம் முடிவுற்ற கணத்திலிருந்து பார்வையாள மனங்களின் அறிதலுக்குள் தன் கூடுதல் இயங்கியலைத் தொடங்குகிறது. அந்த அளவில் பாடல்களுக்காகவும், காமெடிக்காகவும் மட்டும் அல்லாமல், காந்திமதி – சண்முகசுந்தரம் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தின் உணர்ச்சிமிகுந்த காட்சி ஒன்று அடுத்த காலத்தில் பெருவிருப்பப் பகடியாக மாற்றம் செய்யப்பட்டுப் பலரையும் கவர்ந்தது.

கரகாட்டக்காரன் மீவுரு செய்ய முடியாத ஒருமுறை நிகழ்ந்தேறிய செலுலாய்ட் அற்புதம்.இயல்பெனவே உருமாறிய புனைவு தனித்தறிய முடியாமல் கதம்பத்துள் ஒளிந்திருக்கும் காகித மலர்.