மெரிக்காவில் நடைபெற்று வரும் ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பரிசு வென்று சாதனை படைத்த தமிழக சிறுவனை நேரில் சென்று வாழ்த்தி அசத்தியிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம், பியானோ இசையில் தனது திறமையை வெளிப்படுத்தி நம் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் ஒரே நேரத்தில் இரண்டு பியானோ இசைக்கருவியை வாசித்த லிடியன் நாதஸ்வரத்தை கண்டு அனைவரும் திகைத்தனர்.
சிறந்த இசைக்கலைஞராக தன்னை நிரூபித்த லிடியன் நாதஸ்வரம் இறுதிச்சுற்றில் வென்று 1 மில்லியன் டாலர் பரிசை பெற்றிருக்கிறார். அவருக்கு அனைவரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், ஒருபடி மேலே சென்று லிடியனின் இல்லத்துக்கே சென்று மகிழ்வித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தனது இல்லத்துக்கு வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவரது இசையில் உருவான பாடலை இசைத்து காண்பித்தார் லிடியன் நாதஸ்வரம். ஏ.ஆர்.ரஹ்மானின் வருகையால் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த காணொளியை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.