விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த முன்னணி பாலிவுட் கலைஞர் அனுராக் காஷ்யப், இப்படத்தை பாராட்டி தீர்த்திருக்கிறார்.

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் அடையாளத்தை பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார்.

மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஸ்கின், காயத்திரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பங்கேற்றுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் கதை உருவாக்கத்தில் மிஸ்கின், நலன் குமாரசாமி ஆகியோரும் பணிபுரிந்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர், நடிகர் அனுராக் காஷ்யப் இதனை புகழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.

“தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ அட்டகாசமான திரைப்படம். தயக்கம், பயமற்ற இயக்குநர் குமாரராஜா இதில் பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறார். திரைப்படம் இன்னும் வெளியாகாததால் இதற்கு மேல் கூற எனக்கு சுதந்திரம் இல்லை” என அனுராக் காஷ்யப்பின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது