ஹேஷ்டேக்குகளின் 12 ஆவது பிறந்த தினம் நேற்று (ஆகஸ்ட் 23) கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்தது. தமிழ் சினிமா திரைப்படமான விஸ்வாசம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பற்றிய விவரங்கள் ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை twitter india அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ட்விட்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அதில் இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலகட்டத்தில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #LokSabhaElections2019 இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டன.

மூன்றாவது இடத்தில் #CWC19 இருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றிய இந்த ஹேஷ்டேக்கினை ட்விட்டர் வாசிகள் அதிகம் பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா திரைப்படமான மகரிஷி #Maharshi எனும் ஹேஷ்டேக்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பட்டியலில் நான்காவது இடம்பிடித்துள்ளது.

ஐந்தாவது இடத்தில் #NewProfilePic எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றது. இதனை புதிய புகைப்படத்தை ப்ரோஃபைல் படமாகத் தேர்வு செய்வோர் பொதுவாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஹேஷ்டேக் எனும் அம்சம் ட்விட்டரில் 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதைக் கொண்டு ஒருபிரிவு சார்ந்த விவரங்களைத் தனியாகப் பிரிக்க முடியும்.

#Viswasam முதலிடம் பிடித்த செய்தி அறிந்த அஜித் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் நடிகர்களின் படத்தின் அறிவிப்பு வருவதிலிருந்து படத்தின் வெற்றி விழா வரை அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளை #ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.