சாய்னா நேவால் வாழ்க்கை, திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா கபூர் நடித்து வந்தார்.தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படத்திலிருந்து விலகிய ஸ்ரத்தா கபூருக்கு பதிலாக பரினீதி சோப்ரா இப்படத்தில் சாய்னா நேவாலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பேட்மிண்டன் சாம்பியனான சாய்னா நேவாலின் வாழ்க்கை, சினிமாவாகி வருகிறது. இப்படத்தில் இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர், சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதன் படப்பிடிப்பு, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. அமோல் குப்தா இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, ஸ்ரத்தா கபூருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓய்வெடுக்கச் சென்றதால் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்த நிலையில் கால்ஷீட் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறி ஸ்ரத்தா கபூர் விலகியுள்ளார்.

இதனையடுத்து சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் பரினீதி சோப்ரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் பூஷன் கூறுகையில், “இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்து, அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். கால்ஷீட் காரணமாக ஸ்ரத்தா விலகியதால் பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளோம்” என்றார்.

இதுபற்றி பரினீதி சோப்ரா கூறுகையில், “இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. படத்திற்காக பேட்மிண்டன் பயிற்சி எடுக்க இருக்கிறேன். படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன்” என்றார்.