ன் ஊரின் கிழக்கே சென்னிமலை செல்லும் சாலையில் மாடுகட்டிபாளையத்தில் ரங்கநாயகியம்மன் அமர்ந்திருக்கிறாள். தெலுங்கில் பேசும் சனத்திற்கான இனக்குழுவின் கடவுள். கோவையிலிருந்து வசதிபடைத்த அந்த சனம் கார் மற்றும் தனிப் பேருந்தில் ஆத்தாவை தரிசிக்க வந்து போவார்கள். ஆத்தா பற்றியான வரலாற்று புத்தகம் கோவிலில் கிடைப்பதில்லை. இருந்தும் செவிவழி கேட்டதில் வழக்கமாக இனக்குழுவை பஞ்ச காலத்தில் கூட்டிவந்து நிலையாக ஓரிடத்தில் தங்கி அவர்கள் குறையைத் தீர்த்த ஆதிப் பெண்தான் ரங்கநாயகி.

ஊரின் பெயரை (அங்கு ஊர் என்றெல்லாம் அப்போதில்லை. இப்போது நான்கு குடும்பங்கள் வீடு கட்டி வாழ்கின்றன) மாடுகட்டிபாளையம் என ஏன் அழைக்கிறார்கள்? நானாக யோசிக்கையில் ரங்கநாயகியின் இனக்குழு தன்னுடன் கூட்டி வந்த மாடுகளை மொளக்குச்சி அடித்து அங்கே கட்டியதால் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி அந்த இடத்தில் கட்டி வளர்க்க சுற்றுப்புறமெங்கிலும் பயிர்கள் இருந்திருக்க வேண்டும். ஆத்தாவை வசதி வாய்ப்புபெற்ற இன்றைய சந்ததி கோவையிலிருந்து கார்போட்டு வந்து தரிசிப்பதில் சிரமம்கொள்ள, பல வருடம் முன்பாக ஆத்தாவை கோவைக்கே கொண்டுசென்று குடியமர்த்திவிட குறி கேட்டார்கள். ஆத்தா மண்டையை ஆட்டிவிட்டது. அதாவது உட்கார்ந்த கிடையைவிட்டு எழப்போவதில்லை என்று சொல்லிவிட்டது.

அம்மாவாசை, பெளர்ணமி, கார்த்திகை தீப நாட்களில் சனம் வந்து போய்க்கொண்டிருக்கிறது கோவிலுக்கு. கார்த்திகை மாத தீபத்திருநாளுக்கு முந்தின நாள் விசேசம்தான் இரவில் கோவிலில். சக்தி அழைப்பு நடைபெறும். நான் சிறுவனாய் இருக்கும் காலத்தில் கரகாட்டம், சர்க்கஸ், என்று பெரும் விழாவாக விடிய விடிய இருக்கும். இப்போது நான்கைந்து பொம்மைக்கடைகள் போடப்பட்டு விற்கமாட்டாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆத்தாவுக்கு மறுநாள் மாலையில் தீபம் ஏற்றியவுடன் ஊர்போகும் அவசரத்தில் சனம் வந்துபோகிறது. கார்த்திகை மாதமென்பதால் சுற்றுப்புறமெங்கிலும் சோளத்தட்டுகள் காடுகளில் நன்கு வளர்ந்து உயர்ந்து நின்று அறுப்புக்கு தயாராய் நிற்கும். அமைவதை இழுத்துக்கொண்டுபோய் இரவில் தட்டுக்களை பிடுங்கிப் போட்டு மெத்தையாக்கி உறவுகொண்டு செல்வார்கள். சுற்றுப்புறத்திலிருந்து திருவிழா காணவரும் சாமார்த்தியசாலிகள் என்கிற கதையை என் சிறுவயதில் சொல்லியிருக்கிறார்கள். காட்டுக்காரன் விழா முடிந்த நாட்களில் குவிந்துகிடக்கும் தட்டைப்பார்த்து வாய்க்கு வந்தபடி ஏசுவார்கள். ‘எம்பட காடு தானாடா கெடச்சுது? புழுத்துத்தானடா உங்களுக்கு சாவு வரும்!’

பத்தாவது வாசிக்கையில் உள்ளூர் நண்பர்களோடும், உள்ளூர் அண்ணன்களோடும் சைக்கிளில் ஆத்தாவைக் காண இரவில் முதன்முதலாக சென்றேன். சப்பாரத்தில் ஆத்தா அமர்ந்திருக்க, கரகாட்டமும் சாலையில் நடந்துகொண்டிருந்தது சக்தி அழைப்பு. சைக்கிளை உருட்டிக்கொண்டு முன்சென்று பாதுகாப்பாய் புதிதாய் முளைத்திருந்த சைக்கிள் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, ஜோட்டாள்களுடன் கரகாட்டம் காண வந்தேன். வயது மூத்த அண்ணன்கள் ஜகா வாங்கிவிட்டார்கள்.

“குருசாமியண்ணன் எங்க போயிருக்கு தெரியுமா?” சுப்பிரமணி கேள்வித்தொனியில் கேட்டவன் அவனாகவே பதிலையும் சொன்னான்.  ‘கோயமுத்தூர்க்காரி எவளையாச்சிம் கரேச் பண்டி காட்டுக்கு கூட்டிட்டு போவறதுக்கு!’ சொன்னவனே வெட்கப்பட்டுக்கொண்டு சொன்னான். “கஞ்சி காச்சுறதுக்கு போயிருக்காரு!”. பின்பாக கஞ்சி காய்ச்சுதல்னா என்ன என்பதை கற்றுக்கொடுக்க ஒருத்தி எனக்கு வந்தாள். எத்தனைமுறை வேண்டுமானாலும் கஞ்சி காய்ச்சலாம்! என்றும் சொன்னாள். கரகாட்டம் கோவிலை நெருங்குவதற்கு ஒருமணி நேரமாயிற்று.

கோவிலில் அண்ணன்கள் இருவரும் கண்கள் வெளியில் விழுந்துவிடுமோ என்பதுமாதிரி முழித்துக்கொண்டு பீடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஆச்சாண்ணா? கஞ்சி காய்ச்சுனீங்களா?’ என்றான் சுப்பிரமணி. ‘மயிருல ஆச்சு! ஒட்டனூட்டு நாயி எதுக்கோ காத்திருந்தாப்ல ஒரு மணி நேரமா பாக்கோம் ரெண்டு பேரும். ஒன்னுத்துக்கும் ஆவுல! அப்பும் கோயலுக்கு போறப்ப தாடியச் செறச்சுட்டு போலாம்னு நெனச்சேன்! நடங்கடா சாராயம் இருக்குதாமா மேக்க காட்டுல! அதையாச்சிம் போயி ரெவ்வெண்டு டம்ளர் குடிப்போம்’ என்று கிளம்பியவர் பின்னால் நானும் ரவியும் மட்டுமே சென்றோம்.

முன்பாக கள்ளுக் குடித்த அனுபவம் மட்டுமே என்னிடமிருக்க, சாராயத்தை இன்றேனும் எப்படியிருக்கிறதென பார்த்துவிடும் முடிவில் நடந்தேன். கள்ளை என் தந்தையாரே ஞாயிறு அன்று மதியமாக ஒரு டம்ளர் அளந்து கொடுப்பார் வீட்டில். அதைக் குடித்ததும் சின்ன வீட்டுக்குள் சென்று தூங்கச் சொல்லிவிடுவார்.  ‘ஒன்னும் செய்யாதில்ல’ என்ற ஏகப்பட்ட என்  விசாரிப்புகளுக்கு ரவி ஒன்றுமே ஆகாது என்றே சொன்னான். கள்ளிச்செடிகள் குவிந்து வளர்ந்திருந்த இட்டேறிக்குள் அண்ணன் எங்களை கூட்டிப் போனது. இருட்டில் ஓரிடத்தில் ஒரு கூட்டம் நின்றிருந்தது.

சென்னிமலையில் மாட்டுவண்டி மலையில் ஏறிய கதையைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் சென்னிமலை வீதியெங்கும் செருப்புகளின் கூட்டம் கிடந்ததாய் பேசினார்கள். அண்ணன் எங்கள் இருவருக்கும் இரண்டு டம்ளர் சாராயம் வாங்கிக் கொடுத்தார். தொட்டுக்கொள்ள மட்டை ஊறுகாயை விற்பனையாளரே கொடுத்தார். எப்படி கோவிலுக்கு மீண்டும் நான் வந்தேன் என்பது தெரியவில்லை. கோவிலின் கிழக்குப் பக்கமாக இருக்கும் கிணற்றின் அருகில் படுத்துக்கொள்வதாயும், வீடு செல்கையில் கூட்டிப் போகுப்படியும் ரவியிடம் சொல்லிக்கொண்டு சாய்ந்துவிட்டேன். இதைத்தான் என் தந்தையார் காலையில் என்னிடம் ‘மட்டையாயிட்டியாமா? சாராயக்குடி என்னடா உனக்கு சாராயக்குடி?’ என்று கேட்டு மிதித்தார். ஆக முதல் குடியே சிறப்புக் குடியாய் இரவு நேரத்தில் அரங்கேறியது எனக்கு.

பின்பாக ஆறு வருடங்கள் நான் குடியைப் பற்றி நினைக்கமுடியாத அளவு மசைபிடித்த நாயொன்று என்னைக் கடித்துவிட்டது. இதனால் கறி வகைகளே ஆறு வருடங்கள் இல்லாமல் பருப்புச் சோறும் ரசமும்தான்! பத்தாம்வகுப்பு விடுமுறையில் கோவையில் மீண்டும் ஒரு வாய்ப்பு என் மாமாவின் நண்பரோடு கிட்டியது. அது சாராயம் என நம்பிப் போய் கள்ளு என்றதும் சப்பென்றாகிவிட்டது.

இருந்தும் கள்ளை வயிறுமுட்ட குடித்துவிட்டு டீக்கடை ஒன்றில் சின்ன தகராறுக்கு கடை ஓனரின் வாயைக் கிழித்துவிட்டேன் கல்லால்! அடிக்க வந்த படையை கல்லைக் கையில் எடுத்துக்கொண்டு மிரட்டிப் பின்வாங்கினேன்! அந்தாளுக்கு வாயில் எத்தனையோ தையல் போட்டார்கள் என்றார்கள் அடுத்த நாள். வியாபாரிகள் சங்கத்தில் அந்தாள் உறுப்பினனாம்! சம்மேளனத் தலைவரின் அடியாட்கள் ஜீப் ஒன்றில் சுற்றிச்சுற்றி தேடினார்கள். நான் சம்மேளனத் தலைவரின் வீட்டுக்கே சென்று ‘அடியேன் தான்’ என்று நின்றேன். அவர் என்னை அடிக்கடி பார்த்திருப்பதாயும் (சாலையில்) உன் தாத்தன் எனக்கு தோழர் என்றும் பாடம் எடுத்தார். அவரிடம் எனக்குப் பிடித்த விசயமென ஒன்றிருந்தது. அது அவரது கடா மீசை. தையல் போட்ட கடைக்காரனுக்கு இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து விடும்படியும், ஒரு மன்னிப்பை கேட்டுக் கொள்ளும்படியும் சொன்னார் அவர். மாமனிடமே வந்தேன்.

கோவையில் இம்மாதிரி அடிதடி விசயங்கள் பல நான் செய்திருப்பதால் அதை தனியேகூட எழுதலாம். ஆக கள்ளோ, சாராயமோ, பிராந்தியோ எதுவாக இருந்தாலும் ரத்த ஓட்டத்தில் வேகத்தைக் கொடுத்து கையை நீட்டச் சொல்லிவிடுகிறது! “அவனென்ன பெரிய கொம்பனா?” என்று நினைத்து உதைவிடச் சொல்கிறது.

தொன்னூற்று ஒன்றில் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த சந்து ஒன்றிலிருந்த அச்சகத்தில் நான் பணியிலிருந்தேன். அச்சகத்தில் மிஷின் மேனாகவும், அச்சுக்கோர்ப்பாளனாகவும், பைண்டராகவும் என்று அனைத்து வேலைகளும் அத்துபடி எனக்கு. அப்போது பாக்கெட் சாராயம் கிடைத்துக் கொண்டிருந்தது. கடை அதே வீதியில் பக்கத்திலேயே இருந்தது. ஆறு மாதம் சென்றிருப்பேன். ஓனரோடு சம்பளப் பிரச்சனை வந்துவிட்டது. அப்போது பிழைப்புக்கு ரயிலில் நண்பர்கள் பட்டாளத்தோடு திருப்பூர் சென்று கொண்டிருந்தேன்.

பட்டாளத்தை ஒருநாள் காலையில் பணிகளுக்குச் செல்ல இயலாமல் நிறுத்தி சாராயக்கடைக்கு ஓட்டிச் சென்றேன். ஐந்து ரூபாயிற்கு கிடைக்கும் ஒரு பாக்கெட் சாராயம் வீரியம் மிகுந்தது. எப்படியும் இரண்டு மணி நேரம் தாங்கும். அதிலும் கூடவே எலுமிச்சை கலந்துகொண்டால் தேவாமிர்தம். அனைவரும் போதையில் அச்சகம் நோக்கிச் சென்றோம். உள்ளே முதல் ஆளாய் நான் நுழைந்தேன். ‘ஏப்பா இன்னிக்கி வேலைக்கி வரலையா நீயி? சின்ன ஞாயித்துக்கிழமையா?’ என்றார். திருப்பூரில் திங்கள் லீவு என்றால் சின்ன ஞாயித்துக்கிழமை. என் பின்னால் நண்பர்கள் நேராக நான் சொன்னதுபடி எழுத்துகள் தாங்கி நின்ற கேஸ்களை வெளியில் இழுத்து தூக்கி வந்து ஒரே இடத்தில் கொட்டினார்கள். மொதலாளி வேண்டாம் வேண்டாமென அங்குமிங்கும் ஓடினார். நான்கு கேஸ்களின் எழுத்துக்கள் சிதறின பிறகு நண்பர்களை நிப்பாட்டச் சொன்னேன். மொதலாளி இரண்டு வாரச் சம்பளத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார். பத்தாது என்றேன்!

எழுத்திற்கு வந்தபிறகு எனக்கு வாய்த்த நண்பர்கள் அனைவரும் சிறந்த குடிவிரும்பிகள். பத்துவருடம் பீர் பாட்டிலை மட்டுமே கையில் வைத்துக் கொண்டிருந்தவனை பிராந்தி குடிக்க வைத்த மகான்கள். ‘ஒன்னுஞ் செய்யாது கோமு!’ எத்தனை குடித்தாலும் பீஸ் போகாத ஆட்களாய்ப் போனதால் சவுகரியமாய் போயிற்று.

என்ன வருத்தம் என்றால் என் புத்தகங்களை வாசித்து விட்டு ஜோடி போட வந்தவர்கள் போகப் போக என் புத்தகங்களை எடுத்துக்கொடுத்து அனுப்பினாலும் படிப்பதில்லை. குடி விரும்பிகள் பின் எப்படி முன்பாக வாசிப்பில் இருந்தார்கள்? எல்லோரும் கள்ளி, சாந்தாமணி, மங்கலத்து தேவதைகள் வாசித்தவர்கள். என் புதிய நாவல் என்ன வந்தது என்று தெரியாது இப்போது. ஆனால் புதிதாய் என்ன சரக்கு வந்திருக்கிறது? என்று தெரியும் அவர்களுக்கு.

திடீரெனத்தான் தெரிந்தது எனக்கு. என் நண்பர் அருண் ஒரு பூனைப்பிரியர் என்பது. நானெல்லாம் பல காலம் முன்பே பூனை வளர்த்து சலித்தவன். பூனைகள் நாய்களைப் போன்று அறிவு மிக்கவைகள் அல்ல. பொதுவாகப் பார்த்தால் விலங்கினங்களின் ஒரே தேவை உணவு மட்டுமே. மற்ற தேவைகள் என்று அவற்றிற்கு எதுவுமிருப்பதில்லை. விலங்கினங்களின் முழு வாழ்க்கையுமே பசியை முன்னிட்டே நகர்கிறது. அருண் ஈரோட்டில் சாக்னா கடையில் அமர்ந்திருக்கக் கூடவே கம்பெனி என்ற பெயரில் நானும் மற்றொரு நண்பரும். சாக்னா கடையில் மூன்று குட்டிப் பூனைகள் சுற்றிக் கொண்டிருந்தன.

வீட்டில் எந்தக் காலத்திலும் பூனை வளர்க்காத அருண், விட்டால் மியாவ் மியாவ் எனக் கத்திக்கொண்டே மூனாயிரம் பக்கம் நாவலை எழுதுமளவு தயாராகிவிட்டார். பூனைகளின் புசு புசு முடிகளுக்காக பெண்பிள்ளைகள் போன்று தடவித்தடவி மடியில் போட்டு வளர்த்தும் ரகமல்ல அவர். கறுப்பு நிறத்திலான பூனையொன்று அவர் தின்னாமல் அல்லது தின்னதுபோல பாசாங்கு செய்து சப்பி வீசும் துண்டுகளுக்காக அவர் முகம் பார்த்து கீழே டேபிளுக்கு அடியில் குந்த வைத்து அமர்ந்துவிட்டது. அவ்வப்போது ‘மியாவ்!’ என்ற அழைப்பு வேறு அவருக்குக் கொடுத்தது. ‘தேஞ் சாமி சீச்சீ வேணுமா? இந்தா!’ என்று அவர் வீச, அது கேட்க என்று ஓடிக்கொண்டிருந்தது.

போதையில் மதிய நேரத்தில் அளவுகடந்த பாசம் அவருக்குள் முளைத்துவிட்டது. கடையிலிருந்த மற்ற  பூனைகள் மற்ற டேபிளை குத்தகைக்கு எடுத்திருந்தன. இந்தக் கறுப்பு பூனை இந்த டேபிளை மட்டும் காண்ட்ரேக்ட் எடுத்துள்ளது போலும். கிளம்பும் நேரம் நெருங்குகையில் அருண் அந்தப் பூனையை வாஞ்சையோடு தூக்கி கையில் வைத்துக் கொண்டு சப்ளையரிடம் சென்றார். ‘நண்பரே! இந்தப் பூனையை நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயி வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்! நான் எவ்ளோ தரணும்? பில்லோட சேர்த்திக்கங்க இதற்கான தொகையையும்!’ என்றார். சாக்னா கடைக்காரர் பூனையை சும்மாவே எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லிவிட, ‘உன்னிய சும்மாவே கொண்டு போகச் சொல்லிட்டார்டா! ஆமா நீயி கடுவனா? பொட்டையா?’ தூக்கிப் பார்த்து கடுவன் என்பதை உறுதி செய்தவர் அதற்கொரு பெயரையும் இட்டுவிட தலைப்பட்டார்.

‘சேகுவேரான்னு வெக்கலாமா தல?’, ‘அதை அப்புறம் பார்ப்போம் அருண் நடங்க’ என்று வெளியில் வந்தோம். வெளியே வெய்யில் பயங்கரமாய் இருந்தது. கண்கள் வேறு கூசிற்று. அப்போது அருணின் கையை நறுக்கென கடித்துவிட்டு பூனை சாலையில் குதித்தோடி மீண்டும் சாக்னா கடைக்குள்ளேயே ஓடிவிட்டது. “ஏன் தலெ? ஒரு பூனைகூட என்கிட்ட நிக்க மாடேங்கே!” என்றார்.

“அதுக்கு தெரியுமுங்க ஒவ்வொரு குடிகாரர்களை பத்தியும். இங்க இருந்தா சீச்சி சாப்டுட்டு நிம்மதியா தூங்கிட்டு இருக்கும். உங்க வீட்டுல தினமும் சீச்சி போட்டு வளத்துவீங்ளா நண்பா? அதனால அறிவாளிகள் என்னிக்குமே அவங்கவங்க எடத்துல இருந்துதான் அறிவப்பத்தி பேசுவாங்க! நாம புரிஞ்சிக்கணும்!”

நண்பர் அருண் திடீரென மூன்றுமாதம் குடியை விட்டுவிடுவார். ஆனால் சொல்வது, குடியைவிட்டு ஒரு மாசம் ஆச்சு தலெ!. இதற்கெல்லாம் நான் கருத்து சொல்வதேயில்லை. டீட்டோட்டலர், டீஆக்டிவேட் என்று வார்த்தைகள் இங்கே புழக்கத்தில் இருந்துகொண்டேயிருக்கின்றன. நண்பர்களுக்கு டம்ளர்களில் அளவு மாறுபடாமல் அழகாக ஊற்றி தண்ணீர் கலந்துகொடுத்தார். “காலம் முழுவதுக்குமான குடியை நான் குடிச்சிட்டேன் தலெ!” என்றார்.

என் அலைபேசியில் அவர் குடிபோதையில் இருகையில் பேசினவற்றை பதிவுசெய்திருந்தேன் முன்பு எப்போதோ. அதை இப்போது போட்டு, “கேளுங்க நீங்க” என்று கையில் கொடுத்துவிட்டேன். தட்டிலிருந்த சிப்ஸை எடுத்துக் கொறித்துக்கொண்டே அருண் அதைக் கேட்கத் துவங்கினார்.

“என்னாத்துக்கு நீங்க இத்தனை பேருக்கு நன்றின்னு புத்தகத்துல போட்டிருகீங்க முன்னாடி? பாருங்க இருபது பேருக்கும்மேல இருக்குது. இவங்கெல்லாம் உங்களுக்கு என்ன பண்ணாங்க? தண்ணி வாங்கிக் குடுத்தாங்களா? இதுக்கு பதிலா ஒரே புத்தகத்துல நன்றின்னு பத்துப் பக்கத்துக்குபோட்டு முடிச்சுடலாம்ல?” இப்படிப் போய்க் கொண்டிருந்தது பேச்சு. உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்த அருண் திடீரென அந்தக் கேள்வியை என்னிடம் வைத்தார்.

“யார் தலெ இது? கேனவாக்குல பேசியிருக்கான்? முட்டாளா அவன்?”

“அது நீங்கதான் அருண்”.

தனிக்குடி என்பது மிகத் துக்கரமானது. ஒருவர் தனிக்குடிக்கு பழகிவிட்டாரெனில் அவரால் சுலபமாக குடி நோயிலிருந்து வெளியேறி வர இயலாது. தனி உலகிற்கு அவரை குடி கொண்டு சென்றுவிடும். வேறு வழியில்லாத ஒரு நாளில் நான் வீட்டில் தனிக்குடி போடாமல் சாக்னா கடைக்குச் சென்றேன். எனக்கென ஒரு கல் மேஜை வைத்த இருக்கை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். சாக்னா கடையிலிருந்த டிவியில் சன் மியூசிக்கில் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.

சனம் கடையினுள் வருதும் போவதுமாக இருந்தார்கள். குடிக்க வருபவர்களிடம் ஒருவிதமான பதட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது. மடக்கென ஊற்றியப் பிறகு மளாரென இடத்தைக் காலிசெய்து ஓடிவிட வேண்டுமென்ற அவசரம். அது ஏன்? என்றெல்லாம் சிலரிடம் விசாரித்து தெரிந்தாகிவிட்டது. தாமதப்படுத்தினால் தெரிந்தவர்கள் வந்துவிடுவார்களாம். நாலு நாயம் பேச வேண்டி வருமாம். அப்புறம் போதை பத்தாதாம். மீண்டும் செலவுசெய்ய வேண்டி வருமாம்.

நான் இடத்தைக் காலி செய்யலாமென நினைத்த கடைசி ரவுண்டில் நடுத்தர வயதில் இருவர் ஜோடியாய் வந்தார்கள். என் எதிர்ப்புறமிருந்த காலி டேபிளில் பாட்டிலை வைத்தவருக்கு காலி பாட்டில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார் கூடவந்தவர். காலி பாட்டிலில் பாதிச் சரக்கை ஒருவர் ஊற்றினார். அளவு சரியாய் இருக்கிறதா? என குனிந்து கூர்ந்து பார்த்தவர் திருப்தியாய் தனக்கென ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டார். அதில் தான் அதிகமிருக்கிறதோ? என்ற சந்தேகத்திலேயே மற்றவர் தன் பாட்டிலை எடுத்துக்கொண்டு அன்னாந்து அப்படியே நீரெதுவும் கலக்காமல் குடித்தார். குடித்து முடித்த மறுகணம் கொடேர்ச்சென வாந்தியெடுத்தார். அவருக்கு சில நிமிடம் ஒன்றும் புரியவில்லை. சாக்னா சப்ளையர் உலகத்தில் இல்லாத கெட்ட வார்த்தைகளை அவர் மீது வீசினார். சுத்தம் பண்ணீட்டு தான் நீ போகணும்! என்றார் சப்ளையர். கூடவே துணைக்கு வந்தவர் எப்போதோ கடையை விட்டுச் சென்றிருந்தார். ஒருவர் வாந்தியெடுத்தால் சிலருக்கு அது ஒத்துக்கொள்ளாது. பலர் திருட்டு முழி முழித்து அமர்ந்திருந்தார்கள் சேர்களில்.

வாந்தியெடுத்த நபர் என்னை நோக்கி வந்தார்.

“நீங்க என்னை உத்துப் பாத்ததால தான் நான் வாந்தி பண்ணிட்டேன். என்ன பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு அரைக் கட்டிங்கிற்கு காசு குடுங்க இப்ப! குடுக்கலீன்னா அதாவிப் போவும்!” என்றார். சப்ளையர் என்னைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை வீசினார். நான் டம்ளரில் ஊற்றிய கடைசி ரவுண்டை முடித்துக் கொண்டேன்.

“மளார்னு குடுங்க! சுத்தப்படாது பாத்துக்கங்க!” என்று அவர் கேட்டபடி நிற்க, சப்ளையர் என்னிடம் வந்து கணக்குச் சொல்லி தொகை வாங்கிப் போனார். ‘மிச்சம் பத்துரூபா சில்றையை வச்சுக்கறேனுங்கண்ணா!’ என்று சொல்லிப் போனார்.

“இப்ப மளார்னு கட்டிங் எனக்குச் சொல்லப் போறீங்களா இல்லியா? என்ன மயிருக்கு என்னை அப்படி பாத்தீங்க நீங்க?” அவருக்கு கோபம் ஏறி விட்டது போலிருந்தது. நான் அமைதியாக எழுந்தேன்.

“நீங்க மட்டும் வவுறு ரொம்ப குடிச்சுப்போட்டு போவப் பாக்கறீங்களா? வுடமாட்டேன் நானு! மளார்னு கட்டிங் வேணும் இப்ப எனக்கு!” என்றவரின் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தேன். பொத்தென கல்டேபிளில் சாய்ந்து இடைச்சந்தில் விழுந்தார் அவர். நான் மெளனமாக வெளியேறினேன். அப்போது கடையினுள் ஈ பறக்கும் சப்தம் கூட இல்லை.

திருப்பூரில் நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் குடிப்பதற்கென ஒரு கடை முன்பு இருந்தது. இப்போது டாஸ்மார்க் குறைப்பு நடவடிக்கையில் அங்கே கடை இல்லை. அந்தக் கடையில் சிறப்பு ஐட்டம் காடைக் குஞ்சுக்கறி. குறைந்தது ஐந்தாறு நண்பர்கள் ஒரு டேபிளைச் சுற்றி வேப்பை மரநிழலில் அமர்ந்துவிடலாம். இரவு விழுந்தாலும் மரத்தடியை விட்டு எழுந்ததில்லை யாரும். அங்கே புத்தக வெளியீடுகளும் நடந்திருக்கின்றன. புகைப்படமெடுத்து முகநூலில் அப்போதே இட்டு நண்பர்கள் லைக்குகள் பெற்று மகிழ்வார்கள் போதையில். முக்கிய விவாதங்கள் நடைபெறுமிடமாக இருந்தது. அந்த முக்கிய விவாதம் என்ன என்றால்? இதுதான்.

“அம்பது ரூவா கேட்டன் தலெ என் பொண்டாட்டிகிட்ட! குடுக்க மாட்டேன்னா! தறில இருந்து நூலை எடுத்துட்டு போயி ரெண்டாயிரம் ரூவாய்க்கு வித்துப் போட்டு வந்துட்டேன். அதுக்குப் போயி ‘வெளங்காமப் போயிருவீடா நீயின்னு திட்டினா தலெ! நானென்ன வெளங்காமயா போயிடுவேன்? அது எந்தக்காலத்துலயும் நடக்காது! நாலு அப்பு அப்பி பொண்டாட்டியையும் புள்ளையையும் அவ அம்மா ஊட்டுக்கு அனுப்பி உட்டுட்டேன். போயிச் சாட்டாறாளுகொ!”

“உனக்கு முன்னால நான் செத்துப் போயிறோனும் தல. நீ என்னோட சாவுக்கு வந்து ஆட்டம் பாட்டம்னு அமர்க்களப்படுத்திடணும் ஆமா! நீ போயிட்டீன்னு வெச்சுக்கோ, நான் வந்துடுவேன் தலெ மொத ஆளா! வந்து கொட்டு மொளக்கு போட்டுத்தான் உன் பொணத்தெ எடுக்கோணும்னு சொல்லீருவேன்!”

அடக் கொடுமையே! இந்த மாதிரியான விவாதங்கள் நடைபெறாமலேயே இருக்கட்டும்.

டேபிள் நிறைந்த விவாதங்களில் தீர்வாய் சில முடிவுகள் :-

1) நண்பர்களில் யாரேனும் . சாப்புட்டு வந்துட்டேன்! சாப்புட்டு வந்துட்டேன்! என்று சும்ம்மாங்காட்டியும் டாஸ்மார்க் பக்கம்  வருதல் கூடாது!

2) போதையில் இருக்கையில் “அவருதான் பேசுங்க” என்று போனை நீட்டுதல் கூடாது. கொஞ்சம் ஏமார்ந்திருந்தால் சுப்ரபாரதி மணியனுக்கு லவ் யூ சொல்லியிருப்பேன். பெண்குரலாக ஆண்குரல் கேட்டதே!

3) அமர்வில் ஒரு பாடகர் நிச்சயம் புலியூர் முருகேசன் மாதிரி இனிமேட்டு வேண்டும்! (பக்கத்து டேபிள்கள் காலியாவதில்லை)

4) நாங்குடிக்கறதில்லீங்! என்று புன்னகையோடு அமர்விற்கு வருபவர்களை கபாலென சாய்த்து ஒரு கட்டிங் ஊற்றிவிடுவது! (இது ரொம்ப முக்கியம்போல் இருக்கிறது! எப்பிடி இவரு மட்டும் தெளிவா இருக்காரு? என்ற சந்தேகம் கூட்டத்தாருக்கே வந்துவிடுகிறது)

5) மங்கலத்து தேவதைகளிடம் அலைபேசியில் பேசும் முறையில் ஒன்றாக “அக்கா சொல்லுங்க்க்கா! போங்க்கா! எத்தனாவது படிச்சிருக்கீங்கக்கா!” என்று அக்கா போட்டு பேசுமும் முறை இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது.