தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பகைநாடான தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விரும்பியதால் வெள்ளைக்கொடி காட்டியது மட்டுமில்லாமல் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பினார். இதனையடுத்து தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரின் புருவங்களை உயரவைத்தார் கிம்.

இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேச ஹாட்லைன்(HotLine) தொலைபேசி சேவையை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த 2018 செப்டம்பரில், இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்வதற்காக தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கிம்மின் மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றம்  ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் முன்னர் இருந்ததுபோல் தீராத பகை நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உலக அரசியல்  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.