இனிமேல் ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு 400 பேரை மட்டுமே  பின்தொடர முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில் ட்விட்டர் பதிவுகளுக்கான எல்லை 140லிருந்து 280 எழுத்துருக்களாக அதிகரிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றதையடுத்து டிவிட்டர்  சமூக வலைத்தளத்தில் வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் டார்க் மோட், புக்மார்க் போன்ற  வசதிகளும்  டிவிட்டர் பயனாளர்களைக் கவர்ந்துள்ளன.

இந்நிலையில், இதுவரை ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு நாளில் 1000 கணக்குகளை பின்தொடரலாம் (Follow) என்ற எல்லை இருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் ஸ்பேம் கணக்குகள் அளவுக்கு அதிகமாக பெருகுவதைத் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளில் அதிகபட்சமாக 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும் என அறிவிக்கப்படுள்ளது.

இதுகுறித்து, ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான யோல் ரோத் கூறுகையில், “99.87% பேர் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். சில கணக்குகளிலிருந்து 400 பேருக்கு மேல் ஒரே நாளில் பின்தொடர்ந்ததை கவனித்தோம். இப்படிச் செய்யும் கணக்குகள் பற்றி, அவர்களால் பின்தொடரப்பட்ட பலர் புகார் அளிக்கின்றனர். அல்லது பிளாக் செய்கின்றனர். பிளாக் செய்யும் கணக்கு ஸ்பேமாக மாறுகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்குத்தான் இந்த நடவடிக்கை” என்றார்.

மேலும் அவர், “இதிலிருந்து சில வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களுக்கு விலக்கு இருக்கிறது. சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு ட்விட்டரில் மெசேஜ் (DM) வழியாக உதவி செய்கின்றன. பரஸ்பரம் பின்தொடர்ந்தால் மட்டுமே வாடிக்கையாளருடன் மேசேஜில் உரையாட முடியும் என்பதால் அத்தகைய கணக்குகளை மட்டும் இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.