“மோகன்! எவ்வளவு நேரம் சாப்பிடாமா வேலை பார்ப்பீங்க? உடம்பக் கெடுத்துக்காதீங்க. போங்க, போய்ச் சாப்பிட்டு வாங்க” குரல் கேட்டு நிமிர்ந்தான். அவனின் டீம் மேனஜர் குமார் சாப்பிடச் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பி போவதைப் பார்த்தான். ஆம். பசிக்கத்தான் செய்தது. ஆனால் ஏனோ சாப்பிட மனம் வரவில்லை. காரணம் நேற்று வந்த ஒரு தொலைப்பேசி அழைப்பு. அக்காதான் இந்தியாவிலிருந்து பேசினாள். அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், முடிந்தால் வரமுடியுமா? என்றும் கேட்டதிலிருந்து அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அப்பாவின் வற்புறுத்தலில்தான் அமெரிக்காவே வந்தான். இல்லை என்றால் இதே ப்ராஜெக்டை வேறு ஒருவருக்குக் கொடுத்திருப்பார்கள். அவன் அமெரிக்கா கிளம்புகையிலே அவருக்கு உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லை. மோகனுக்கு அப்பாவைப் பக்கத்தில் வைத்து தாங்க ஆசை. ஆனால், அப்பாவோ, “மோகன் நம் குடும்ப நிலமை நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை. உன் ஒருவனால்தான் இந்தக் குடும்பம் நிமிர்ந்து நிற்க முடியும்” என்று பலவாறு அறிவுரைகளைச் சொல்லி அனுப்பிவைத்தார்.

அப்பா! நினைக்கவே அவன் மனம் சந்தோசத்தில் துள்ளுகிறது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் மோகனுடையது. இரண்டு அக்கா மற்றும் ஒரு தம்பி தங்கையுடன் பிறந்தவன். மோகனின் அப்பா ரெங்கநாதன் தாலுக்கா ஆபிஸில் ஒரு சாதாரணக் கிளார்க். அவர் நினைத்திருந்தால் எப்படி எல்லாமோ சம்பாதித்து இருந்திருக்கலாம். ஆனால், ஒரு பைசா யாரிடமும் வாங்க மாட்டார். அப்படித்தான் ஒரு முறை, ஒரு சாராய வியாபாரி, ஒரு பைலை தாசில்தாரிடம் சொல்லி கையெழுத்து அவசரமாக வாங்கித் தர சொல்லி, ரெங்கநாதனின் வீட்டிற்கு வந்து பழங்கள், சில சமையல் பொருட்கள், ஆயிரம் ரூபாய் பணம் வைத்துத் தட்டில் வைத்துக் கொடுத்தார். இவர் என்ன செய்திருக்க வேண்டும். ஒன்று வாங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால், எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று அவரை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இவரோ அவர் கொண்டு வந்த தட்டைத் தூக்கி எறிந்து அவரைக் கண்டபடி திட்டி வெளியே துரத்திவிட்டார். அதோடு விட்டாரா? தாசில்தாரிடம் சொல்லி அந்தப் பைலை கையெழுத்துப் போட்டுக்கொடுக்காதபடி செய்துவிட்டார். கோபப்பட்ட அந்தச் சாராயவியாபாரி மோகன் குடும்பத்திற்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. பின் தாசில்தாரே தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும்படி ஆகிவிட்டது.

மோகன் அவரிடம் ஒரு நாள், “ஏம்பா இப்படி இருக்கீங்க? எல்லோரும் போல இருக்கலாம் இல்லை?” என்று கேட்க,

“நமக்கு அடுத்தவங்க பணம் எதுக்குடா? நாம உழைச்சுச் சம்பாதிக்கிற பணம்தான் உடம்பில் ஒட்டும். தெரிஞ்சுக்க. பணம் வேணுமா? கடுமையா உழை. அதைவிட்டுவிட்டு அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படக்கூடாது” என்று அறிவுரைச் சொல்ல ஆரம்பித்தார்.

அன்று அப்பாவின் அந்த அறிவுரைதான் மோகனை இன்றுவரை கடும் உழைப்பாளியாக மாற்றி இருக்கிறது.

கடுமையாகப் பசிக்கவே சாப்பிடுவதற்காகக் கேண்டின் சென்றான். தனியாக ஒரு டேபிளில் அமர்ந்தான். மீண்டும் அப்பாவே அவன் மனதை ஆக்கரமித்தார். சீக்கிரம் இந்த ப்ராஜெக்ட்டை முடித்துவிட்டால் இந்தியா செல்லலாம். பின் கம்பனியின் டைரக்டரிடம் சொல்லி அமெரிக்கா வேண்டாம் என்று சொல்லிவிடலாம். பின் அப்பாவைப் பக்கத்துலேயே வைத்துக்கவனிக்கலாம். அப்பாவுக்கு ஓரளவு சரியானவுடன், இரண்டாவது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும். பின் தங்கைக்கு… தனக்கு..! நமக்கு என்ன இப்ப அவசரம்? அப்புறம் பார்க்கலாம் என்று மனதைக் கட்டுப்படுத்தினான்.

ஒரு பர்கரை எடுத்துக்கொண்டு தனியாக ஒரு டேபிளில் அமர்ந்தான். கேண்டினில் அவ்வளவு கும்பல் இல்லை. ஏனென்றால், இது சாப்பாட்டு நேரம் இல்லை. மோகன் தினமும் கண்ட நேரத்தில் வந்து சாப்பிடுவதால், கூட்டத்தை அவன் பார்த்ததில்லை. இந்த அமைதிதான் அவனுக்குப் பிடித்திருக்கிறது. அமெரிக்கர்கள் கூட்டமாக ஆண்களும் பெண்களுமாக அமர்ந்து சாப்பிடுவதை ஏனோ அவன் மனம் ரசிப்பதில்லை. சில சமயம் இவன் நினைப்பதுண்டு, “ஒரு வேளை அவர்கள் சந்தோசமாக இருப்பதை நினைத்து நான் பொறாமைப்படுகிறேனோ?” அதுதான் உண்மை என்றும் இவன் அடிமனது அடிக்கடிச் சொல்லும்.

பர்கரை எடுத்து வாயில் வைத்தான். ஆனால் சாப்பிடத்தான் முடியவில்லை. மீண்டும் அப்பா… காலம் முழுவதும் பிள்ளைகளுக்காகவே உழைத்திருக்கிறார். தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே பஸ் ஸ்டாண்டு செல்வார். அதுவும் கிழிந்த செருப்புடன். ஒரு சைக்கிள் வாங்க கூட அவரிடம் காசு இருந்ததில்லை. பல நாட்கள் கிழிந்த பனியனுடன் அவரைப் பார்த்திருக்கிறான். ஒரு நல்ல பேண்ட் சட்டை அவரிடம் இருந்ததில்லை. ஆனால் மோகனுக்கு ப்ளஸ் ஒன் படிக்கையிலேயே கடன் வாங்கி டி.வி.எஸ். 50 வாங்கிக் கொடுத்தார். அப்போது அவன் உணரவில்லை என்றாலும் பின்னாளில் அவரின் அன்பை நினைத்து உருகி இருக்கிறான். அப்பா ரிடையர்ட் ஆகியும் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். முடியாத வயதிலும் தினமும் காலையில் சென்றால் இரவில்தான் வருவார். இருப்பதைச் சாப்பிடுவார். ஒரு நாள்கூட இது வேண்டும் அது வேண்டும் என்று அம்மாவிடம் சண்டையிட்டதில்லை.

“ஏம்பா இந்த வயதிலயும் வேலைக்குப் போய்க் கஷ்டப்படுறீங்க?” என்று கேட்கும் நிலையில் மோகன் இல்லை. காரணம், படித்து முடித்துச் சரியான வேலை கிடைக்காமல் இருந்தான். முதலில் அப்பா அவரின் நண்பரின் மூலம் ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தக் கம்பனியில் 23 நாட்களுக்கு மேல் மோகன் வேலையில் இல்லை. பின் மாமா பாண்டிச்சேரியில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். அங்கும் அதே நிலமை. காரணம் தன் படிப்புக்கேற்ற வேலை வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தான். பின் இரண்டு வருடங்களுக்கு அப்புறம் பெங்களுர் IBMஇல் வேலை கிடைக்கவே அதில் சேர்ந்தான். அதன்பின் படிப்படியாக முன்னேறி ஓரளவு நல்ல நிலமைக்கு வந்தான். இனி அப்பாவை உட்காரவைத்து சோறுபோட வேண்டும் என்று நினைக்கையில் அமெரிக்கா வந்துவிட்டான். இப்போது அப்பாவை உடனடியாகப் பார்க்க வேண்டும் போலிருந்தது மோகனுக்கு.

சிறு வயதில் அம்மா ஒருமுறை சொன்னது மோகனுக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது. ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஒருமுறை அப்பா சிறு குழந்தையான மோகனையும் அழைத்துக்கொண்டு அம்மாவுடன் திருச்சிக்கு அருகே இருக்கும் வயலூர் முருகன் கோவிலுக்குச் சென்றாராம். வேண்டுதல் முடிந்தவுடன் ஊருக்குக் கிளம்புகையில் குழந்தை பயங்கரமாக அழுதிருக்கிறது. என்ன காரணம் என்று பார்த்தபோது வயிறு சாப்பாடு செரிக்காததால் உப்பி இருந்திருக்கிறது. இப்போதுபோல் முன்பெல்லாம் பஸ் வசதி இல்லை. அப்பா அம்மாவை கோவிலில் உட்கார வைத்துவிட்டு மோகனை தோளில் தூக்கிவைத்துக்கொண்டு திருச்சி வரை ஓடியே டாக்டரிடம் சென்றாராம். மோகனுக்குச் சரியாகி நன்றாகச் சாப்பிடும்வரை அவரும் சாப்பாடு தண்ணியில்லாமல் இருந்திருக்கிறார்.

அப்பா 12 வயது வரை மோகனுக்கு குரு, காலேஜ் முடிந்து வேலையில் சேரும் வரை வில்லன், ஆனால் இன்றோ ஹீரோவும் தெய்வமுமாய்.

மோகனுக்கு ஒரு பத்து வயது இருக்கும். அடுத்த நாள் தீபாவளி. அப்பா ட்ரெஸ் வாங்கி வருவார் என வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறான். இரவு வருகிறார். ட்ரெஸைக் காண்பிக்கிறார். மூஞ்சி போன போக்கைவைத்து புரிந்துகொள்கிறார். உடனே அந்த இரவிலும் கிளம்புகிறார், அடுத்த ட்ரெஸ் வாங்க. பத்தாவதில் அதிக மார்க வாங்கியும், மோகன் காமர்ஸ் குரூப் எடுக்க ஆசைப்படுகிறான். எல்லோரும் டிப்ளமோ சேர்கிறார்கள். அவனையும் வற்புறுத்துகிறார்கள். மறுக்கிறான். அப்பா கூப்பிடுகிறார்,

“ஏம்பா, உனக்கு டிப்ளமா பிடிக்கலையா”

“இல்லைப்பா”

“ஏன்?”

“எனக்கு ஒயிட் காலர் ஜாப் பார்க்கணும்னு ஆசை. பிகாம், எம்காம் அப்படி ஏதாவது படிக்கலாமுனு”

“சரிப்பா, உனக்கு எது புடிக்குதோ, அதைப்படி. ஆனா, எது படிச்சாலும் அதுல பெரியா ஆளா வரப்பாரு”

வயது 20. கிரிக்கெட், பத்திரிக்கை, படிப்புனு இருந்த காலம். கிரிக்கெட் விளையாட அதிக நேரம் செலவானபோது, ஒரு நாள் அப்பா கூப்பிட்டார்,

“தம்பி, கிரிக்கெட் விளையாடு. வேணாம்னு சொல்ல. ஆனா, படிப்பா, பத்திரிக்கையா, கிரிக்கெட்டானு என்னைக் கேட்டினா, படிப்புதான் சொல்லுவேன். எனக்கு எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கல. நானும் உங்களுக்கு ஒன்னும் சேர்க்கல. உனக்கு இருக்கும், இருக்கபோகும் ஒரே சொத்து உன் படிப்புதான். பார்த்து நடந்துக்கோ”

ஒருமுறை கல்லூரி படிக்கும்போது ட்ரெஸ் வாங்க பணம் கேட்டான். அவர் குடுத்த பணம் பத்தவில்லை. சண்டை போட்டான்.

“என்கிட்ட அவ்வளவு பணம் இல்லைப்பா? என்றவர், வெளியில் போய்ட்டு வந்துவிட்டு கேட்ட பணத்தைக் கொடுத்தார். அம்மாவிடம் கேட்டான், “ஏதும்மா, அப்பாவுக்குப் பணம்?”

“எங்காவது கடன் வாங்கி வந்திருப்பார்” என்றார்கள்.

அடுத்து வந்த ஒரு நாளில், புது ட்ரெஸ்ஸை போடலாம் என நினைத்து, ரூமிற்குச் சென்று எடுக்க போகையில், அப்பாவைப் பார்த்தான். அவர் பனியன் முழுவதும் ஓட்டை. அதை போட்டு வெள்ளை சைட்டை போட்டு ஆபிஸ் செல்கிறார். அம்மாவிடம் கேட்டான்,

“ஏம்மா, அப்பா ஒரு நல்ல பனியன் வாங்க கூடாதா?”

“இதை, நீ பணம் பத்துலனு அப்பாட்ட சண்ட போட்ட பாரு, அப்ப கேட்டுருக்கணும்”

நினைவுகளிலிருந்து மீண்டு தன் இடத்திற்குச் சென்றான். கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். நேரம் காலம் பார்க்காமல், சாப்பாட்டுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் வேலையில் ஆழ்ந்தான். அப்போதுதான் சீக்கிரம் ப்ராஜக்ட்டை முடிக்க முடியும். முடித்தால்தான் உடனே இந்தியா செல்ல முடியும் என்று நினைத்துக் கடுமையாக வேலை செய்தான். நல்ல வேலை அப்பாவுக்கு அவ்வளவு சீரியஸ் இல்லையாம். முதுமை பிரச்சனைதானாம். அக்கா போன் செய்து சொன்னாள். கொஞ்சம் நிம்மதியாக வேலை செய்து, அவர்கள் கொடுத்த நாட்களுக்கு முன்னதாகவே வேலையை முடித்தான்.

கம்பனியில் அவன் பாஸ் அசந்து போய் அவனைப் பாராட்டி பார்ட்டி வைத்து அவனைப் புகழ்ந்து தள்ளினார். அடுத்த இரண்டு நாட்களில் இந்தியா செல்ல டிக்கட் புக் செய்து கொடுத்தார்கள். இருந்த ஒரு நாள் ஓய்வில அப்பாவுக்கு ஒரு பேண்ட் சர்ட் வாங்கினான். ஒரு மூக்கு கண்ணாடி வாங்கினான்.

சரியாகக் கிளம்பும் தினத்தன்று அக்கா மீண்டும் போன் செய்தாள், “அப்பாவுக்கு மூச்சு திணறல் அதிகமா இருக்கு”

படபடப்புடன் விமான நிலையத்தை அடைந்தான். அன்று பார்த்து அவன் செல்ல வேண்டிய விமானம் தாமதமாகக் கிளம்பும் என்ற செய்தியினை அறிந்து துடித்துப் போனான். ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் தாமதம் என்றால் பரவாயில்லை.

எட்டு மணி நேரம் தாமதம். வேண்டாத தெய்வம் இல்லை, “ஆண்டவா, விமானம் இன்னும் தாமதமாகப் புறப்படக்கூடாது. சீக்கிரம் கிளம்ப வேண்டும். நான் அப்பாவை உடனே பார்க்க வேண்டும். எப்படியாவது என் அப்பாவை காப்பாற்று. அவரை நான் கொஞ்சநாள் வைத்திருந்து அழகு பார்க்க வேண்டும். எங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டவர் அவர். இனி சந்தோசத்தை மட்டுமே அவர் அனுபவிக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டே இருந்தான். நல்ல வேளை. எட்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மீண்டும் தாமதிக்காமல் விமானம் புறப்பட ஆரம்பித்தது. 24 மணி நேர பயணத்தில் எதுவுமே சாப்பிட தோன்றவில்லை. அப்பா மட்டுமே நினைவில் இருந்தார்.

ஏர் ஹோஸ்டல் வந்து அடிக்கடி பார்த்துவிட்டு, “ஆர் யு ஓக்கே சார்? ஏன் சாப்பாடு வேண்டாமா?” என்று ஆங்கிலத்தில் அடிக்கடிக் கேட்டாள். இவன் வேண்டாம் என்று கண்ணசைத்துவிட்டு சற்று தூங்க முயற்சித்தான்.

பல விதமான சிந்தனைகள். எல்லாமே அப்பாவைப் பற்றியதுதான். அவனால் அப்பாவைத் தவிர வேறும் எதுவும் சிந்திக்க முடியவில்லை. ஒரு வழியாகச் சென்னை வந்தடைந்தான். உடனே கனக்டிங் விமானம் இல்லாததால் ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு திருச்சி நோக்கிப் பயணித்தான். இதே அப்பா நல்ல நிலமையில் இருந்தால், இரவில் இவனை மெட்ராஸில் இருந்து திருச்சிக்குக் காரில் வர அனுமதிக்க மாட்டார். இந்த விசயத்தில்கூட அப்பா நினைவுதான். அவனின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு அசைவிலும் அப்பா கலந்திருந்தார். டிரைவரிடம் கொஞ்சம் வேகமாகப் போகச் சொன்னான். இவனின் வேதனையை உணர்ந்த டிரைவர் வேகமாக ஓட்ட ஆரம்பித்தார்.

இடையில் ஒருமுறை அக்காவிற்குப் போன் செய்தான். “அப்பாவை வீட்டிற்குக் கூட்டி வந்துவிட்டோம். கவலைப்படாத வா. இனி ஒன்றும் பயப்படத்தேவை இல்லை” என்றாள். கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்தான். ஆனால், அவன் அக்கா அந்தச் சேதியை சாதாரணமாகச் சொல்லாமல் அழுது கொண்டே சொன்னது இவனைக் கலவரப்படுத்தியது. மீண்டும் ஒரு வழியாகச் சாமியை வேண்டிக்கொண்டே சென்றான். மனம் பதபதப்பாய் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் திருச்சி சென்றடைந்தான்.

ஒருவழியாக கார் இவன் தெருவை அடைந்து வீட்டை நெருங்குகையில் பக்கத்து வீட்டு கிட்டு மாமா காரை நிறுத்தி,

“வாடா அம்பி. வந்துட்டியா? இனி உன் தோப்பனார் சரியாயிடுவார். உன்னைத்தான் பார்க்கணும்னு ஓயாம சொல்லிட்டிருந்தார். வந்துட்டியோல்லியோ. இனி பிரச்சனை இல்லை” என்று சொன்னவருக்குப் பதில்கூடச் சொல்லாமல் காரைவிட்டு வேகமாக அப்பாவைப் பார்க்க வீட்டிற்குள் ஓடினான் மோகன்.

சிறிது நேரத்தில் “ஐய்யோ” என்று பெண்ணின் பெரிய அழுகுரல் கேட்கவே, வீட்டிற்குள் செல்ல இருந்த கிட்டு மாமா மோகனின் வீட்டிற்கு ஓடி உள்ளே சென்றார்.

அங்கே, மோகன் அவனின் அப்பாவின் காலடியில் விழுந்து கிடந்தான். அவனின் ஒரு கை அப்பாவின் கால்களையும், மற்றொரு கை அவனின் மார்பையும் பிடித்திருந்தது. கண்கள் அப்படியே மேல் நோக்கி ஒரே இடத்தில் இருந்தது.

அறையின் ஓரத்தில் மோகன் வாங்கி வந்த மூக்கு கண்ணாடி கிடந்தது.