மழை நாட்களில்
ஓலை பந்தல் நிரப்பியிருந்த
முன்வாசற் குழிகளில்
நீர் அருந்தியிருக்கும் …

காரை பூசப்படாத
கருங்கல் புறச்சுவரின்
காடிப் பொந்தில் வசிக்கும்
அவைகளுக்கு..,

என் தங்கையும் நானும்
சிதறுகின்ற உணவின்
மிச்சம் போதுமானது ..!

தண்ணீர் நிரம்பி
எப்போதும் திறந்தேயிருக்கிற
வெளித் தொட்டியில்
குதித்து குளித்து
எட்டுத் திசையும் தெறிக்க
சிறகுலர்த்தும்…!
சிறுபிள்ளையான நான்
அடம்பிடிக்க
ஒன்றைப் பிடித்து
கிளுவன் பந்தற்காலில்
கட்டியிருந்தார்
குறும்புக்கார மாமா…!

என் இருபத்தைந்தின்
ஒரு தினத்தில்..,
எப்போதோ
மண்தரை தொலைத்த
எங்கள் வீட்டின் முதல் தளத்தில்..,

அடைக்கப்பட்டிருந்த
வெளிப்புறக் குழாயில்
அலகை நுழைத்து
தண்ணீர் தேடிக் கொண்டிருந்தது
அரியதாய் ஒரு சிட்டுக்குருவி …!!!