மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப் புத்தகத்தின் கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்தத் தொடர்…

மதராஸ் – மண்ணும், கதைகளும் -2

கி.பி. 780ஆம் ஆண்டு கேரளத்தின் மலபார் கடற்கரைக்கு வந்த தாமஸ் கானாதான் இந்தியாவில் கால்பதித்த முதல் ஆர்மேனியர் என்று அரசின் பதிவேடு சொல்கிறது இருந்தாலும் கிமு 430இல் பண்டைய இந்தியாவில் கிரேக்கர்கள், பெர்சியர்கள், ஆர்மீனியர்கள் இங்கு வந்து வணிகம் செய்ததாக குறிப்புகள் உள்ளன. தொடர்ந்து ஆர்மீனியர்கள் பலர் வந்தபடியே இருந்தாலும் பதினாறாம் நூற்றாண்டில்தான் காளிகாட் மற்றும் மதராஸப்பட்டினத்தில் கணிசமாக குடியேறியுள்ளார்கள். கிழக்கு ஐரோப்பா, ஈரானிலிருந்து ஆர்மீனியர்கள் மிகுந்த எண்ணிக்கையில் மெட்றாசுக்கு வணிகம் செய்ய கப்பலில் வந்திறங்கினார்கள். உயர்தர துணிகள், வைரக்கற்களை, மசாலா பொருட்களை, இரத்தினக்கற்களை விற்றார்கள். துருக்கி மிளகாய் உலகப் புகழ்பெற்றது. அதைக் கொண்டுவந்து விற்றார்கள்.
வாசனைத் திரவியங்களை விற்றார்கள். இன்றைய ஈராக், ஈரான் எல்லாம் அன்றைக்கு ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின்கீழ் இருந்தது. ஈராக்கில் உள்ள பெட்ரா மற்றும் மொசூல் நகரில் மஸ்லின் துணிகள் புகழ்பெற்றிருந்தன. அதை வாங்கி, விற்பதில் ஆர்மீனியர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள். சதுரங்கப் பட்டினத்தை (மகாபலிபுரம் அருகே உள்ள ஊர்) சட்ரஸ் என்றும் அழைப்பார்கள். அங்குள்ள டச்சுக்கோட்டையில் மஸ்லின் துணி வணிகம் நடந்துள்ளது. வங்கத்தின் டாக்கா, சதுரங்கப்பட்டினம் மற்றும் மொசூல் புள்ளிகளை இணைக்கும் கோடாக மதராஸில் வசித்த ஆர்மீனியர்கள் இருந்தார்கள்.

சென்னை உயர்நீதீமன்றம் எதிரே ஆர்மீனியர் தெரு உள்ளது. ஆர்மீனியர்கள் இங்கே தங்கி வணிகம் செய்ததால் அந்தப் பெயர். இன்றும் அதே பெயரில் அழைக்கப்படும் தெரு. இங்கு 1712இல் கட்டப்பட்ட ஒரு சிறு தேவாலயம் உள்ளது. அதுதான் ஆர்மீனியன் சர்ச். வெளியிலிருந்து பார்க்க சாதாரணமாக வீடுபோல தெரியும். உள்ளே நுழைந்தால்தான் அந்த இடத்தின் அற்புதம் தெரியும். ஆர்மீனியர்களுக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. அதனால் இந்த தேவாலயங்களில் புகைப்படங்கள்தான் உள்ளன.

உலகத்திலேயே ஆர்மினியர்களுக்கு என்று தொடங்கப்பட்ட முதல் பத்திரிக்கை அன்றைய மெட்றாஸில்தான் 1794இல் வெளியிடப்பட்டது. பத்திரிக்கையின் பெயர் அஸ்தரர் (Azdarar). இந்தப் பத்திரிக்கையை இங்குள்ள ஆர்மீனியர்கள் படித்ததோடு கப்பலில் ஆர்மீனியாவுக்கு அனுப்பிவைத்து அங்குள்ளவர்களையும் படிக்கவைத்துள்ளார்கள். அந்தப் பத்திரிக்கையாசிரியர் ஹருதீன் சமவோனியன் என்ற ஆர்மீனிய மதகுரு. அவரது கல்லறை இங்குள்ளது. அவரைத் தவிர முந்நூற்று ஐம்பது ஆர்மீனியர்களின் கல்லறைகள் இங்குள்ளன. முந்நூற்று ஐம்பது கல்லறைகள் இருப்பதை வைத்துப் பார்க்கும்போது அன்றைய மதராசப்பட்டினத்தில் சில ஆயிரம் ஆர்மீனியர்களாவது வசித்திருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொள்ளலாம். அன்றைய மக்கள்தொகையில இது ஒரு கணிசமான எண்ணிக்கைதான். தவிர செயின்ட்தாமஸ் மலையிலும் ஆர்மீனியர்கள் வசித்தார்கள். இவர்கள் தங்கள் கல்லறைகளை மற்ற கிறிஸ்துவர்கள்போல பூமிக்குமேலே உயர்த்திக் கட்டமாட்டார்கள்.
முந்நூற்றுஐம்பது கல்லறைகளும் தரைமட்டமாக்க இருக்க சமவோனியன் கல்லறை மட்டும் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருக்கும். சர்ச்சில் ஆறு பிரமாண்ட மணிகள் உள்ளன. ஒவ்வொரு மணியும் நூற்றைம்பது கிலோ எடை கொண்டவை லண்டனில் தயாரிக்கப்பட்டு கப்பலில் கொண்டுவந்து இறங்கியுள்ளார்கள். முந்நூறு ஆண்டுகளைத் தாண்டியும் இன்னமும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அந்த மணிகள் ஒலித்தபடியே உள்ளன. இதன் அருகிலேயே கன்னிமேரி தேவாலயம் என்ற ரோமன் கத்தோலிக்க சர்ச் உள்ளது. அதன் சில பகுதிகளையும் ஆர்மீனியர்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. தவிர தேவாலயத்துக்கு பெரும்பொருள் உதவியும் செய்துள்ளார்கள்.

செயின்ட் தாமஸ் மலைக்குச் செல்லும் படிக்கட்டுகளையும் ஆர்மீனியர்கள்தான் கட்டியுள்ளார்கள். மெட்ராசில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆர்மீனிய வணிகரான பெட்ரூஸ் உஸ்கான்தான் அதைக் கட்டியுள்ளார். அப்போதைய மதராஸ் சிறுகிராமம். செயின்ட் தாமஸ் மலை தொலைவில் இருந்தது. ஜார்ஜ் கோட்டை இருந்த வெள்ளையர் நகரத்திலிருந்து மலைக்குச் செல்ல வெள்ளம் பெருக்கெடுத்தோடும் அடையாற்றைத் தாண்டித்தான் செல்லவேண்டும். தேவாலயத்திற்கு வருபவர்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் அடையாற்றின் குறுக்கே 1726இல் ஒரு பாலத்தைக் கட்டிக் கொடுத்தார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். அப்போது அதைக் கட்ட ஆன செலவு முப்பதாயிரம் பகோடா (பொற்காசுகள்). பின்னர் இந்தப் பாலம் சேதமடைந்துவிட்டதால் 1950களில் இதன் அருகிலேயே தற்போது இருக்கும் மறைமலை அடிகள் பாலம் கட்டப்பட்டது. பெட்ரூஸ் உஸ்கான் இங்கு வந்தபோது கர்நாடகா நவாப் அவரை வரவேற்று விருந்து கொடுத்து மதராஸில் வணிகம் செய்துக்கொள்ள அனுமதி தந்துள்ளார்.

1749இல் மதராஸை பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து பிரிட்டிஷ் மீண்டும் கைப்பற்றிய பிறகு உஸ்கானை மட்டும் கோட்டைக்குள் வசிக்க அனுமதி தந்துள்ளார்கள். அப்படியென்றால் உஸ்கானின் செல்வாக்கைத் தெரிந்துக்கொள்ளலாம். 1751இல் உஸ்கான் மறைந்தார்.
உஸ்கான் வேப்பேரியில் ‘Lady of Miracles’ என்ற தேவாலயத்தைக் கட்டி வழிப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அங்கேயே கல்லறை அமைத்தார்கள். பிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் தரங்கம்பாடி டேனிஷ் பாதிரியார் ஒருவர் அந்த இடத்தை விலைக்கு வாங்கி உஸ்கானின் கல்லறையை மட்டும் அகற்றாமல் ஒரு புதிய தேவாலயத்தைக் கட்டினார். அதுதான் இப்போதிருக்கும் செயின்ட் மத்தியாஸ் சர்ச். மதராஸில் அன்று இயங்கிய பல கல்விநிறுவனங்கள், வைத்தியசாலைகள், தேவாலயங்களை ஆர்மீனியர்கள் கட்டியுள்ளார்கள். பின்னாட்களில் அவை புதுப்பிக்கப்பட்டு மாற்றமடைந்துள்ளன. அன்றைய காலத்தில் அநேக பொது காரியங்களுக்கு ஆர்மீனியர்கள் நிதி வழங்கியுள்ளனர்.

ஏசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் அன்றைய கேரளத்தின் மலபார் கடற்கரைக்கு வந்து அங்கிருந்த ஆட்சியாளர்களால் துரத்தப்பட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இங்குள்ள செயின்ட் தாமஸ் மலையில் தங்கியிருந்தபோது கொலை செய்யப்படுகிறார். இங்கேயே அவருக்குக் கல்லறையும் அமைக்கப்படுகிறது. பின்னாட்களில் அந்தக் கல்லறையை கண்டுப்பிடித்து உலகப் பிரபலமடைய செய்ததும் ஆர்மீனியர்கள்தான்.
ஆர்மீனியர்கள் மிகுந்த மதநம்பிக்கை கொண்டவர்கள். உலகின் முதல் கிறிஸ்துவநாடு என்ற பெருமையும் ஆர்மீனியாவுக்கு உண்டு. ஆர்மீனியர்கள் இன்றும் பழைய வழக்கத்தின்படி டிசம்பர்-25க்கு பதில் ஜனவரி-6ஐ கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

இவ்வளவு சிறப்பாக வாழ்ந்த ஆர்மீனியர்களின் வரலாறு பின்னாட்களில் ரத்தத்தால் எழுதப்பட்டது. இந்த நூற்றாண்டின் முதல் மிகப்பெரிய இனப்படுகொலை ஆர்மீனிய படுகொலை. முதல் உலகப்போர் நடந்த நேரத்தில் ஒட்டாமன் சாம்ராஜ்யத்தில் இருந்த துருக்கியர்கள் ஆர்மீனியர்களை ஓட ஓட விரட்டினார்கள். ஆர்மீனியர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று துருக்கி அரசு அவர்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது. இந்த இனப்படுகொலையைப்பற்றி எண்ணற்ற பதிவுகள், நூல்கள் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த இனப்படுகொலையில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிரிகோரிஸ் பலாகியன் என்ற பாதிரியார் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

ஆர்மீனியன் கோல்கோதா (Armenian Golgotha) என்ற அந்தப் புத்தகத்தில், உலகப்போர் என்பதால் துப்பாக்கிக் குண்டுகளுக்கு கிராக்கி. எனவே துருக்கி மக்கள் கிராமங்களில் நுழைந்து கையில் கிடைத்த கோடரி. அரிவாள், தடிகள், மண்வெட்டி. சுத்தியல், கொறடுகளை வைத்தே ஆர்மீனியர்களை கொன்றுக் குவித்தார்கள்.பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். உறுப்புகளை வெட்டினார்கள். தலைகளைத் துண்டித்தார்கள். இறந்த பிணங்களை ஆடைகளைக் களைந்து ஒளித்துவைத்திருந்த பொருட்கள் எது கிடைத்தாலும் திருடிப் பிணங்களைப் பாலைவனத்தில் அழுகிபோகும்படி விட்டுச்சென்றார்கள் என்று பதிவுசெய்துள்ளார். அந்தப் படுகொலையில் எஞ்சிய பலாகியன் போன்றோர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து சில ஆண்டுகள் கழித்தே அங்கு என்ன நடந்தென்று உலகத்துக்குச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன கதைகளைக் கேட்டு உலகமே உறைந்து நின்றது.

யூதர்களைபோல ஆர்மீனியர்கள் நாடற்று அலைந்தார்கள். பிறகு ஒருவழியாக அவர்களது தேசத்தை மீண்டும் உருவாக்கினார்கள். பொதுவாக புலம்பெயர்ந்த அகதிகள் புதுதேசத்தை உருவாக்கும்போது உலகெங்கும் உள்ள தங்கள் மக்களை அழைப்பார்கள். இஸ்ரேலில் நடந்ததுபோல. அப்படித்தான் மதராஸில் வாழ்ந்தமக்கள் ஒவ்வொருவராக ஆர்மீனியாவுக்கு குடியேறினார்கள். எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டதால் தங்கள் தேசத்துக்கு திரும்பிச்சென்று அதை கட்டமைக்கும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. தவிர யுத்தகாலம் என்பதால் வணிகர்களுக்கு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் சிரமம் இருந்துள்ளது. எனவே அவர்கள் இங்கிருந்து ஆர்மீனியாவுக்கு கிளம்ப முடிவெடுத்துள்ளார்கள்.

இன்றைய ஆர்மீனியதேசம் என்பது மேற்கு ஆசியாவும், கிழக்கு ஐரோப்பாவும் சந்திக்கும் சிறுபுள்ளி. ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள். இப்போதிருக்கும் ஆர்மீனியா என்ற சிறுதேசத்தில் வசிப்பவர்கள் வெறும் முப்பது லட்சம் ஆர்மீனியர்கள் மட்டுமே. ஆர்மீனியர்கள் மென்மையானவர்கள். யூதர்கள் இப்போது பாலஸ்தீனத்தை அச்சுறுத்துவதுபோல பிரச்சினைகள் செய்வதில்லை. ஆர்மீனியர்கள் கண்களில் எப்போதும் ஒருவித நிரந்தரசோகம் இருக்கும். அவர்கள் இப்போதும் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். தங்களை இனப்படுகொலை செய்த துருக்கி அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் துருக்கியோ அப்படி ஓர் இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று தொடர்ந்து சொல்லிவருகிறது.

தற்போது சென்னையில் இருக்கும் ஆர்மீனியன் தேவாலயத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை அபூர்வமாக யாரேனும் ஆர்மீனியர்கள் வந்துப்போகிறார்கள். அதுவும் வேறு இடங்களை பார்க்கவருபவர்கள் இதையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வருகிறார்கள். பார்த்துவிட்டு திரும்பும்போது ஒரு கணமாவது தங்கள் கண்களில் நீர்கசியாமல் திரும்பிச்செல்வதில்லை.

2014ஆம் ஆண்டு 375வது சென்னை தினம் கொண்டாடினார்கள். அதில் ஆர்மீனியர்களின் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளிநாட்டில் வசிக்கும் ஆர்மீனியர்கள் சிலர் வந்திருந்தார்கள். அப்போது மைக்கேல் ஸ்டீபன் என்ற ஆர்மீனியரும் கலந்துகொண்டார். சென்னையில் வசித்த கடைசி ஆர்மேனியர். அவரது காணொளி யூட்யூபில்கூட உள்ளது. அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக பேசுகிறார். காணொளியில் அவர் தங்களுக்கு நடந்த சோகத்தைச் சொல்கிறார்.

ஆர்மீனியர்கள் மெல்ல மெல்ல சென்னையைவிட்டு சென்றபிறகு எஞ்சிநின்ற ஒரே குடும்பம் மைக்கேல் ஸ்டீபனுடையது. அப்போது அவர் ஐந்தாம்வகுப்பு படிக்கிறார். பள்ளியில் ஆர்மீனிய மொழி சொல்லித்தர ஆளில்லை.
கல்கத்தாவிலிருந்து ஆர்மீனிய ஆசிரியர் ஒருவர் வந்துள்ளார். அவருக்கும் ஆர்மீனிய மொழி தாய்மொழி இல்லை என்பதால் துல்லியமான ஆர்மீனிய உச்சரிப்பைக் கற்றுத்தர முடியவில்லை. பிறகு மைக்கேல் குடும்பமும் இங்கிருந்து காலிசெய்து பெங்களூர் சென்றுள்ளது. பெங்களூரில் வசித்தபோது அவரது அம்மாவுக்கு ஆர்மீனிய மொழியே சுத்தமாக மறந்துப்போனதாம். அம்மாவும் இறந்தபிறகு மொழியை சொல்லித்தர ஆளே இல்லையாம். ஆங்கிலம், கன்னடம், தமிழ் என்று கலந்து பேசியுள்ளார்கள். நாற்பது, ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தகவல்தொடர்பு அவ்வளவாக இல்லை. அதனால் இங்கிருந்து சென்ற மற்ற ஆர்மீனியர்களுடன் பேசவோ, உரையாடவோ வழியில்லாமல் இருந்துள்ளது. ஒரு மொழியைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். புழக்கத்தில் இல்லாதமொழி அழிந்துவிடும் என்பார்கள். அவரது தாய்மொழியே மெல்லமெல்ல அவரைக் கைவிட்டுச் சென்றுள்ளது. அதை மிகுந்த வருத்தத்துடன் சொன்னார். தற்போது மைக்கேல் பெங்களூரில் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிகிறார். முகநூல் வழியாக ஆர்மீனிய நண்பர்களைத் தொடர்புக்கொண்டு தனது மொழியறிவை வளர்த்துவருகிறார்.

அந்தக்காணொளியில் அவர் மெட்றாசுக்கு வந்திருந்த ஆர்மீனிய சுற்றுலாப் பயணிகளைப் பார்த்துச் சொன்னது இதுதான். “இங்கே நமது வேர் உள்ளது. ஒருகாலத்தில் நாம் இங்கே வசித்தோம். மூதாதையர் கல்லறைகள், தேவாலயங்கள் உள்ளன. இந்த மண்ணுக்கு கடமைப்பட்டுள்ளோம். நான் ஆர்மீனிய மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். வசதியுள்ள ஒரு சிலராவது திரும்ப சென்னைக்கு வாங்க. இங்கே வந்து மீண்டும் வணிகம் செய்யுங்க. உங்கள் குழந்தைகளை இங்கே படிக்கவைங்க.”

அவர் பேசியதைக் கேட்டதும் எனக்குத் தோன்றியது இதுதான். மெட்றாஸ் என்பது வெறும் மண்ணல்ல. அது ஓர் உணர்வு.

முந்தைய தொடர்கள்:

1.தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் – https://bit.ly/2J0okyC

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
  7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
  9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
  10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  12. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  13. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
  14. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  15. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
  16. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
  17. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்