1. ஒரு பொருள் கவிதைகள்

“தேடிக் காண்பதுதான் கவிதை”

பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன. தேடிக் காண்பதுதான்
கவிதை. தேடாமல் காண இயலாது.

# க. நா. சு.

o

நண்பர்களே,
உங்களில் சிலர் அறிந்திருக்கலாம்.

“கவிதையின் கால்தடங்கள்” அந்திமழை இணையதளத்தில் தொடராக, ஏறக்குறைய ஓராண்டு வெளிவந்து, புத்தகமாகவும் 2014-ல் அகநாழிகை வெளியீடாக வந்தது. 50 கவிஞர்களின் 400 கவிதைகள் கொண்ட தொகுப்பாக அமைந்தது அது.

அதற்குப் பின், சிறுகதை, குறுநாவல் என்று உரைநடை பக்கம் பயணித்துக் கொண்டிருந்தாலும், ப(பி)டித்த நல்ல கவிதைகளை, அவ்வப்போது முகநூலில் பதிந்து வருகிறேன்.

“கவிதையின் கால்தடங்கள்” போல, உயிர்மை இணையதளத்தில், ஒரு தொடர் எழுத முடியுமா என்ற கேள்வி எதிர்வந்து விழுந்ததும், தீவிர யோசனைக்குப் பின், இதோ இந்த முதல் அத்தியாயத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளை “ஒரு பொருள்” குறித்தவை என்கிற விதத்தில் தொகுக்க விழையும் ஒரு முயற்சியே இந்தத் தொடர்.

“பறவை” என்ற தலைப்பிலோ, பொருளிலோ வந்த கவிதைகளை இந்த முதல் அத்தியாயத்தில் தொகுத்திருக்கிறேன்.

எந்த ஒரு கவிதை வாசகனுக்கும் ஒரு அறிமுகமாகவோ, தேடிப் படிக்க, தனக்கு பிடித்த கவிதைகளை அல்லது கவி ஆளுமைகளை கண்டடையவோ, இந்த தொடர் உதவக் கூடும் என்பதே என் வரையில் இதற்கு நான் வரித்துக் கொண்ட கட்டுப்பாடு.

மற்றபடி,  முதிர்/இளம் என்ற எந்தப் பாகுபாடுமின்றி, என்னைக் கவர்ந்த, நான் படித்த கவிதைகளை இங்கு தொகுக்க முற்படுகிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

O


 

பறவையின் நிழல்
# சி. மோகன்

பெருநகரத் தார்ச்சாலையில்
சட்டென வீழ்ந்து
சல்லென நீந்தி
நீண்டதோர் கட்டிடத்தில் மோதி
சிறு விபத்துமின்றி மறைந்தது
ஒரு பறவையின் நிழல்.

*

இளைப்பாறல்
# ராணிதிலக்

அவன் மலைமீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்,
அவன் தோளுக்கும் வலிக்காமல்,
ஒரு பறவையின் நிழல்,
சற்றே
அமர்ந்து
கடந்து விட்டது.

*

விதி
# கலாப்ரியா

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

*

இளிப்பு
# சுந்தர ராமசாமி

தூங்கும் என் செவிப்பறை அதிர
அதிகாலை கத்தும் அந்தப் பறவை,
உண்மையில் கத்தல் அல்ல; இளிப்பு
என்னை நினைத்து
என் அல்லல்களைக் கண்டு
என்னை ஆட்டிக்குலைக்கும் புதைப்பயங்கள் மணந்தறிந்து
என் பிழைப்பின் பஞ்சாங்கம்
வரிவரியாய்ப் படித்தது போல்
அதிகாலை இளிக்கத் தொடங்குகிறது அது.
இருப்பினும் ஒன்று அதற்கு தெரியாது
நான் ஆயுள் காப்பில் பணம் கட்டி வருகிறேன்.
இறப்பின் மூலம் இருப்பவர் பெறும்
மனிதத் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது
அந்த இளிக்கும் பறவைக்கு.

*

அறைவனம்
# சுகுமாரன்

பிறகு விசாரித்தபோது தெரியவந்தது
‘அது கானகப் பறவையும்
அடிக்கடி தென்படாதாம்
அபூர்வமாம்’

எப்படியோ
அறைக்குள் வந்து சிறகு விரித்தது

அலமாரியில் தொற்றி
அது யோசித்தபோது
புத்தகங்கள் மக்கி மரங்கள் தழைத்தன

நீர்ப்பானை மேல் அமர்ந்து
சிறகு உலர்த்தியபோது
ஊற்றுப் பெருகி காட்டாறு புரண்டது

ஜன்னல் திட்டில் இறங்கி
தத்தியபோது
சுவர்கள் கரைந்து காற்றுவெளி படர்ந்தது

நேர்க்கோடாய் எம்பிக்
கொத்தியபோது
கூரையுதிர்ந்து வானம் விரிந்தது

அறையைப் பறவை
அந்நியமாய் உணர்ந்ததோ
பறவையை அறை
ஆக்கிரமிப்பாய் நினைத்ததோ?

என்னவோ நடந்த ஏதோ நொடியில்
வந்த வழியே பறந்தது பறவை
அது
திரும்பிய வழியே திரும்பி போனது
அதுவரை அறைக்குள்
வாழ்ந்தது கானகம்.

*

சற்றைக்கு முன்
# ஆனந்த்

சற்றைக்கு முன்
ஜன்னல் சட்டமிட்ட வானில்
பறந்துகொண்டிருந்த
பறவை
எங்கே?

அது
சற்றைக்கு முன்
பறந்து கொண்
டிருக்கிறது.

*

பார்வை வலி
# பாலை நிலவன்

பறவை பறந்து கொண்டிருக்கையில்
மிதந்து கொண்டிருக்கிறது
கூடவே வானமும்.

பறவையைச் சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்.

*

புறக்கணிப்பு
# சல்மா

கூடு தேடிச் செல்லும்
பறவைக் கூட்டம்
பொருட்படுத்துவதேயில்லை
எனது வீட்டு தோட்டத்தின்
ஒற்றை மரத்தினை.

*

காவியம்
# பிரமிள்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

*

பறவையின் பிணம்
# ஞானக்கூத்தன்

மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று
செத்துக் கிடந்தது நடக்கும் பாதையில்.
குழப்பத்தோடு முதல் நாள் பார்த்தேன்.
பறவையின் பிணத்தை அடக்கம் செய்ய
நூல்கள் எதுவும் சொல்லுகின்றனவா?
பிணத்தைப் பார்த்ததும் தன் வழி போகும்
ஆளுக்குப் பாவப் பரிசுண்டோ?
மறுநாள் அந்தப் பறவை மூக்கை மறைத்து
செத்துக் கிடந்தது அதே இடத்தில்.
யாரும் ஒன்றும் இடையில் செய்யலை. ஆதலால்
நூல் மறுப்பொன்றும் இருக்காதென்று
எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மறுநாள் அந்தப் பறவை சிறகை மறைத்து
செத்துக் கிடந்தது கொஞ்சம் நகர்ந்து –
மழிக்கப்பட்ட ரோமப் பந்து போல்.
குழப்பத்தோடு அன்றும் பார்த்தேன்.
மறுநாள் அந்தப் பாதையை கடந்தேன்.
பறவையின் தடத்தை ஓயாதழிக்கும் வானில்
சுவரும் கிடையாது சுற்றமும் இல்லை.
பாதையைக் காற்றும் துப்புரவாக்கி
நடக்கத் தகுந்ததாய்ச் செய்திருந்தது.

*

சாம்பல் நிறப் பறவை
# லஷ்மி மணிவண்ணன்

எனது தரப்பு
அதில் விஷேசமாக ஒன்றுமில்லை
முற்றிலுமாக அழித்துக்கொள்கிறேன்
எந்தத் தரப்பிலும் நின்று
என்னால் தர்க்கப்பூர்வமாக தொண்டாற்ற இயலும்
ஏராளமான பாவனைகளை
வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டு விட்டேன்.
உங்களுக்கு சமமானது போல நடிக்கும்
நவீன கால அடிமையாக
என்னால் தீவிரமாக ஜோடிக்க முடியும்.
ஒருபோதும் உங்களுக்கு மனச்சோர்வு
ஏற்படாமல் என்னை பாதுகாத்துக் கொள்கிறேன்
உங்களை மிஞ்சும் ஒரு செயலிலும் ஈடுபடமாட்டேன்
எனது மனதின் சமநிலை பற்றி நீங்கள் துளிகூட
சந்தேகிக்காதீர்கள்.
வாழ்வின் பெரும் சிரமத்திற்குப் பிறகு
நீங்கள் வந்து சேர்ந்த பதவிகளுக்கு
ஆபத்து நேராமல்
என்னை
கண்காணித்துக் கொள்கிறேன்.
நீங்கள் நினைத்ததை செய்கிறேன்
நினைத்ததைத்தான் செய்கிறேன்
என்பதை ஒருபொழுதும் வெளிக்காட்டாமல்
நடந்து கொள்கிறேன்.
குடிப்பதை நிறுத்தி விடுகிறேன்.
நீங்கள் குடிக்கும் சாராயமாக
என்னை மாற்றிக் கொள்கிறேன்.
உங்கள் தோழிகள் தோழர்கள்
யாரிடமும் குறுக்கிடமாட்டேன்.
நீங்கள் வரைந்து தருகிற சித்திரத்தை
சட்டையாக மாற்றி கொள்ளும் சாமனமாக
மாறிவிடுகிறேன்
ஒரு வேலை தாருங்கள்
எனக்காக அல்ல
நானொரு சாம்பல் நிறப் பறவை
எனது மனைவிக்காகவும்
குழந்தைக்காகவும்
அவர்களை நம்பியுள்ள
சில தாவரங்களுக்காகவும்.

*

மனமொளிர் தருணங்கள்
# பொன்.வாசுதேவன்

தளர்ந்து இறுகும்
சிறகுகள் அசைத்துக்
கால் புதைய காற்றில்
நடக்கிறது ஒரு பறவை

என்னை நானே
அருந்தி ரசிக்கும் தருணம் அது

காற்று உதிர்த்த
பறவைச் சிறகின் கதகதப்பைக்
கைப்பற்றி
கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்

தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது
பறவை
உதிர்ந்த சிறகு குறித்த
கவலையேதுமற்று.


 

அறிமுகக் குறிப்பு:

செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.


 

 

*

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வாசிப்பின் மீதான கவிதைகள்
  2. பூனை கவிதைகள்
  3. 'குருவி' - கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  4. 'குழந்தை' கவிதைகள் - செல்வராஜ் ஜெகதீசன்
  5. ‘வீடு’ - கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்