எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம் 5
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.

மிளகுக் கொடிகள் பச்சைப் பசேல் என்று விரிந்து படர்ந்திருக்கிற ஒரு மலை.

அந்த மலையில் ஒரு பலாமரம் இருக்கிறது.

அந்தப் பலாமரத்தில் பெரியபெரிய பலாப்பழங்கள் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பழங்கள் மணமா மணக்கு.

ஒரு இரவு நேரம்.

அந்த மலைமேல் மேகங்கள் வந்து குவிகிறது.

மேகங்கள் முழங்குகின்றன.

மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறது.

பழுத்து மணம் வீசுகிற அந்தப் பலாமரத்தில் ஒரு ஆண்குரங்கு உட்கார்ந்திருக்கிறது. அந்த ஆண் குரங்கின் அடர்த்தியான முடிகள் மழையில் நனைந்து குளிரில்  சிலிர்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த ஆண்குரங்கு அது தின்பதற்காக பழுத்த ஒரு பலாப்பழத்தை கையில் எடுக்கிறது.

நன்றாகப் பழுத்து மணம் வீசுகிற அந்தப் பெரிய பலாப்பழம் குரங்கின் பிடியில் இருந்து தவறி கீழே விழுகிறது.

கீழே விழுந்த அந்தப் பெரிய பலாப்பழத்தை வெள்ளம் அடித்துக்கொண்டு போகிறது.

அந்தப் பெரிய பலாப்பழத்தை அருவியில் இருந்து ஓடுகிற ஒரு பெரிய ஓடை ஊர் குளத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.

பழுத்த அந்தப் பெரிய பலாப்பழத்தின் மணம் ஊரெல்லாம் மணக்கிறது.

-மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்
குறுந்தொகை 90