கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர் 5
வாழேன் போல்வல் தோழி யானே.

ஒரு ஆறு.

அந்த ஆற்றின் கரையில் சொதசொதன்னு சேறாக்கெடக்கு.

அந்தச் சேறும் அந்த ஆற்றின் தண்ணீரும் ஜில்லென்னு குளிர்ச்சியாக இருக்கிறது.

அந்தக் குளிர்ந்த சேற்றில் ஒரு நாரை நின்று கொண்டிருக்கிறது. அது தன் சிவந்த அலகால் அந்தக் குளிர்ந்த சேற்றில் மீன் இருக்கிறதா என்று கிளறிக்கிளறித் தேடிக்கொண்டிருக்கிறது.

அந்தக் குளிர்ந்த சேற்றில் நின்று கொண்டிருக்கிற அந்த நாரையின் இறகுகள் முள்முருங்கை மரத்தின் பூக்களைப்போல் மென்மையாக இருக்கிறது.

அது வாடைக்காலம்.

வாடைக்காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது.

வாடைக்காற்றின் குளிரைத் தாங்க முடியாமல் அந்த நாரை நடுங்குகிறது. நடுங்கிக் கொண்டிருக்கிற அந்த நாரைமேல் குளிர்ந்த தண்ணீரை அள்ளி அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறது அந்த வாடைக்காற்று.

-வாயிலான் தேவனார்
குறுந்தொகை 103